‘செல்லும் இடமெல்லாம் இதை ஏந்திச் செல்கிறேன்’: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி

‘செல்லும் இடமெல்லாம் இதை ஏந்திச் செல்கிறேன்’: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி

மதுரையில் பிறந்து கூகுளின் தாயான அல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்திருப்பவர் சுந்தர் பிச்சை. அண்மையில் இந்தியா அறிவித்த பெருமதிப்புக்குரிய பத்ம பூஷன் விருது, இந்திய தூதர் வாயிலாக அமெரிக்காவிலிருக்கும் சுந்தர் பிச்சையை தற்போது அடைந்திருக்கிறது. விருதினை பெற்றுக்கொண்ட சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி மேலிட இந்தியாவுக்கும், இந்தியர்களுக்குமான தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங், சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற எளிய நிகழ்வில், பத்ம பூஷன் விருதினை சுந்தர் பிச்சையிடம் கையளித்தார். சுந்தர் பிச்சைக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், ‘இந்தியா எப்போதும் என்னில் ஒரு பகுதியாகவே நீடிக்கிறது. அதனை எங்கே சென்றாலும் சுமந்தே செல்கிறேன்’ என்று நெகிழ்ந்தார் சுந்தர் பிச்சை.

மதுரையில் பிறந்து அமெரிக்காவின் மவுண்டன் வ்யூ பகுதியில் தற்போது வசிக்கும் சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷன் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இவருடன் சேர்ந்து நடப்பாண்டுக்கான பத்ம பூஷன் விருதினை 17 பேர் பெற்றார்கள். வர்த்தக மற்றும் தொழில்துறை பிரிவின் கீழ் சுந்தர் பிச்சைக்கான பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. இந்த விருதினை அமெரிக்காவில் தற்போது பெற்றுக்கொண்ட சுந்தர் பிச்சை, ’எனது விருப்பமறிந்து கல்வி மற்றும் அறிவை புகட்டிய பெற்றோரின் தியாகத்துக்கும், திறம்பட வடிவமைத்த இந்திய அரசுக்கும் நன்றிகள்’ என மகிழ்ந்தார்.

ஆயிரம் டாலர் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலத்துக்காக செய்யப்பட இருப்பதாகவும், இந்தியாவின் கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம் சார்ந்தவற்றில் எப்போதும் கூகுள் இணைந்திருக்கும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். சுமார் 10 லட்சம் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்குவது, அரசு அமைப்புகளுடன் இணைந்து 55 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது, 1 லட்சம் இளைஞர்களுக்கான கூகுள் சான்றிதழுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சிகள் ஆகியவற்றில் இந்தியாவுடன் கூகுள் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in