போரின் விளைவு: பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளுக்கு கிராக்கி!

அமெரிக்கா, ஐரோப்பாவில் விற்பனை தீவிரம்
போரின் விளைவு: பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளுக்கு கிராக்கி!

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் மக்கள், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு செய்திகளை மணிக்கொருமுறை கவனித்துக்கொண்டே வருகிறார்கள். உக்ரைன் மீதுள்ள அனுதாபம் மட்டுமல்ல, இந்தப் போரால் தங்களுடைய உயிர்களுக்கும் ஆபத்து நிச்சயம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இதன் விளைவாக பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளை வாங்கி தயாராக கையிருப்பில் வைத்துக்கொள்கிறார்கள். இந்த மாத்திரைகள் அணுகுண்டு வீச்சு அல்லது அணுக்கதிர் வீச்சு போன்றவற்றால் பாதிப்பு நேராமல் ஓரளவுக்குத் தடுக்க உதவும்.

உலக சுகாதார நிறுவனமோ அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ நிபுணர்களோ இதை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கூறவில்லை. ஓரளவுக்கு அறிவியல் அறிந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஒருவர் இன்னொருவருக்கு வாய்மொழியாகச் சொல்லி இந்த மாத்திரைகளை மக்கள் வாங்கிவிடுகின்றனர்.

அணு அச்சுறுத்தல்

உக்ரைனைத் தாக்குமாறு பிப்ரவரி 24-ல் உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுதங்களைத் தயாராக வைத்திருக்குமாறு ரஷ்ய ராணுவத்தினருக்குக் கட்டளையிட்டார். இதையடுத்து ‘நேட்டோ’ ராணுவக் கூட்டில் உள்ள நாடுகளும் தங்கள் பங்குக்குத் தயாராகின. உக்ரைனின் நகரமான செர்னோபிலில் உள்ள அணுசக்தி நிலையம் ஏற்கெனவே ஒரு முறை விபத்தால் கடுமையான கதிரியக்கத்தை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேல் அந்தப் பிராந்தியத்தையே ஆள் அரவமற்றதாக்கியிருந்தது. இப்போது அந்த நகரின் மீதும் ரஷ்ய ராணுவத் தாக்குதல் நடந்தது. ரஷ்யப் படையினரின் தாக்குதலால் ஸாப்போரிஸியா அணு உலை தீப்பற்றி எரிந்தது. இதனால் அணுக்கதிர் வீச்சு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும் எப்போது என்ன நடக்குமோ எனும் அச்சம் தொடர்கிறது.

செர்னோபிலில் மட்டுல்ல ரஷ்ய நாட்டின் வேறு எந்த அணு உலையிலிருந்தும் விபத்தாலோ, நாச வேலையாலோ இப்படி நேரவும் வாய்ப்புகள் உண்டு என்ற சந்தேகம் வலுத்தது. எனவே அப்படிப்பட்ட விபத்துகள் நிகழ்ந்தால் தற்காத்துக் கொள்வதற்காக பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளை ஓரிரு மாதங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல் தவணையாக எல்லோரும் வாங்கினர். இதன் விளைவாக இந்த மாத்திரைகள் எல்லா மருந்துக் கடைகளிலும் விற்றுத்தீர்ந்துவிட்டன. ஆறு மாதங்களில் விற்றுத்தீரக்கூடிய மாத்திரைகள் கடந்த வாரம் ஐந்தே நாட்களில் தீர்ந்துவிட்டது. கடைகளில் இல்லை என்றதும் பலரும் நேரடியாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கே மின்னஞ்சல் மூலம் தேவையைச் சொல்லி ஆர்டர்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.

மாத்திரையின் பலன் என்ன?

அணு நிலையங்களிலிருந்து கதிர்வீச்சு ஏற்பட்டால் காற்றில் அந்தத் தன்மையுடன் அயோடின் பரவும். அது மூச்சுக்காற்று வழியாக நுரையீரலுக்குச் சென்றுவிடும். காற்றில் பரவும் கதிர்வீச்சு அம்சம் கொண்ட அயோடின் நீரிலும் மண்ணிலும் தாவரங்களிலும் பிராணிகளிலும் கலந்துவிடும். இது தைராய்டு சுரப்பியைத்தான் முதலில் சேதப்படுத்தும். உடலில் பலவித ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதில் தைராய்டுக்கு முக்கியப்பங்கு உண்டு. தைராய்டு சுரப்பி சரியாக வேலைசெய்யவில்லை என்றால் முன்கழுத்துக் கழலை என்ற நோய் ஏற்படும். கழுத்து வீங்கிவிடும். மிக சின்னஞ்சிறு அளவிலான இந்த சுரப்பி கழுத்தில் முன்பக்கம் சிறிய வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கிறது. கதிர்வீச்சு ஏற்பட்டால் தைராய்டு சுரப்பிக்கு வழக்கமான அயோடினுக்கும் கதிர்வீச்சு ஏறிய அயோடினுக்கும் வித்தியாசம் தெரியாதாம். கதிர்வீச்சு அயோடினை அது அப்படியே உள்ளிழுத்துவிட்டால் தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு புற்றுநோயே வந்துவிடும். அப்படி நேராமலிருக்கத்தான் அயோடைடு மாத்திரைகள் பயன்படும். இதை திரவமாகவோ மாத்திரையாகவோ மருத்துவர்களின் ஆலோசனைப்படிதான் உட்கொள்ள வேண்டும்.

முதலில் வாங்கி வைத்துக்கொள்வோம், பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வோம் என்று முன்னெச்சரிக்கையாக ஏராளமானோர் வாங்கிச் சென்றதால் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் தயாரித்த மாத்திரைகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டன. ஐரோப்பாவிலும் இத் தகவல் பரவி அங்கும் கடைகள் முற்றுகையிடப்பட்டு மாத்திரைகள் இருப்பில் இல்லை என்று கடைகளில் போர்டு வைக்கத் தொடங்கிவிட்டனர். மருந்து நிறுவனங்கள் இப்போது அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை வேகமாகத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. இதன் துணை விளைவாக மாத்திரையின் விலையும் இப்போது உயர்ந்துவிட்டது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் அணுக்கதிர்வீச்சின் தீய விளைவுகளைத் தடுக்க அயோடைடு மாத்திரைகளைச் சாப்பிடுவது மட்டுமே போதுமானதல்ல. சில வேளைகளில் இந்த மாத்திரைகள் கூட பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடலாம். இதனால் உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து மரணம் வரையில் எது வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் மக்கள் இன்றிருக்கும் மன நிலையில் அணுக்கதிர்வீச்சால் சாவதைவிட மற்ற வழிகள் அனைத்துமே பரவாயில்லை என்று நினைக்கின்றனர்.

ஸ்டாக் இல்லை

நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆன்பெக்ஸ் இன்க். நிறுவனம் 65 மில்லி கிராம், 130 மில்லி கிராம் எடையுள்ள பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளை ஐயோசாட் (IOSAT) என்ற பெயரில் தயாரிக்கிறது. இப்போது கைவசம் மாத்திரைகள் இல்லை என்று அதன் இணையதளம் தெரிவிக்கிறது. பிப்ரவரி இறுதியிலிருந்து இதுவரை ஒன்றரைக் கோடி மாத்திரைகளை அது விற்றுள்ளது. வாரா வாரம் புதிய ஸ்டாக்குகள் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் அவையும் உடனுக்குடன் காலியாகின்றன. ஒரே சமயத்தில் தனி நபர்கள், சில்லறை மருந்து வியாபாரிகள், வழக்கமாக விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகள், மாநகராட்சிகள், அரசுகள், ராணுவ மருத்துவமனைகள் என்று அனைத்துமே இந்த மாத்திரைகளைக் கேட்டு ஆர்டர்களை அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

அணுகுண்டு வெடிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நேரும்போதெல்லாம் அயோடைடு மாத்திரைகளுக்குத் தேவை அதிகரித்து விடுகிறது. 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை எச்சரிக்கும் விதமாக, “எங்களிடம் மிகப் பெரிய – சக்தி வாய்ந்த ஆயுதம் இருக்கிறது” என்று எச்சரித்தார். அது அணுகுண்டுதான் என்று தீர்மானித்த மக்கள் அயோடைடு மாத்திரைகளை வாங்கிக் குவித்தனர். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை ஒன்று வந்துகொண்டிருக்கிறது என்று ஹவாய் நெருக்கடி நிர்வாக முகமை அமெரிக்கர்களை எச்சரித்தபோதும் இந்த மாத்திரைகள் விற்றுத் தீர்ந்தன. இந்த மருந்துகளை நீண்ட காலம் வைத்திருந்து பயன்படுத்த முடியாது. இவற்றுக்கு மிகக் குறைந்த ஆயுள் காலம்தான். எனவே அவசரப்பட்டு வாங்கி வைத்தாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு அவற்றின் வீரியம் குறைந்துவிடும். புதிதாக வாங்கினால்தான் பிழைக்க முடியும்.

லண்டனைச் சேர்ந்த பிடிஜி சிறப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் தைரோ சேஃப் என்ற பெயரில் அயோடைடு மாத்திரைகளைத் தயாரிக்கிறது. அவற்றின் மாத்திரைகளும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இப்போதைக்கு இந்நிறுவனம் தான் தயாரிக்கும் மாத்திரைகளை அரசுகள், பொது சுகாதார மையங்கள், ராணுவம் ஆகியவற்றுக்கு மட்டுமே விற்கிறது. அவற்றின் கையிருப்பு அதிகமான பிறகு கடைகள் மூலம் மக்களுக்கு விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

* பயன்படுத்தப்பட்டிருப்பவை மாதிரிப் படங்கள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in