பொய் சொல்கிறார்கள்... போரை நிறுத்துங்கள்: நேரலையில் குரல் எழுப்பிய ரஷ்ய சேனல் ஆசிரியர் கைது!

பொய் சொல்கிறார்கள்... போரை நிறுத்துங்கள்: நேரலையில் குரல் எழுப்பிய ரஷ்ய சேனல் ஆசிரியர் கைது!

உக்ரைன் மீது தொடர்ந்து 20-வது நாளாகத் தாக்குதல் நடத்திவருகிறது ரஷ்யா. இந்நிலையில், போரை நிறுத்துங்கள் என ரஷ்ய அரசு ஊடகத்திலிருந்தே நேரலையில் போருக்கு எதிராக ஒலித்த குரல் எதிர்ப்பு கவனம் ஈர்க்கிறது.

ரத்த சொந்தமும் நீண்ட கால உறவும் கொண்ட உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை ரஷ்யர்கள் பலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் ஒரு பாகமாக இருந்த உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் புதின் அரசைக் கண்டித்து ரஷ்யாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன. உக்ரைன் போர் தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவது தொடர்பாக ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கும் ரஷ்யா, சமூகவலைதளங்களையும் முடக்கியிருக்கிறது. போர் குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தையும் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை போருக்கு எதிராகக் குரல் கொடுத்த குழந்தைகள், பெண்கள் உட்பட 15,000 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசு ஆதரவு ஊடகங்கள், இந்தப் போர் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்குவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம், ஊடகங்களில் பணிபுரியும் பல ஊழியர்களும் புதின் அரசின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். டிவி ரெயின் (டோஷ்ட்) எனும் சுயாதீன தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பணியிலிருந்து விலகியிருக்கிறார்கள். எக்கோ மோஸ்க்வி எனும், வானொலி நிலையமும் தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கிறது. பல ஊடகங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், நேற்று மாலை அரசுத் தொலைக்காட்சியான ‘சேனல் ஒன்’ சேனலில், செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது அதன் ஆசிரியர்களில் ஒருவரான மரினா ஒவ்சையான்னிகோவா, “போரை நிறுத்துங்கள். போர் வேண்டாம்” என்று கூச்சலிட்டார்.

அவர் வைத்திருந்த பதாகையில், ‘இந்தப் பிரச்சாரத்தை நம்பாதீர்கள். அவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள். ரஷ்யர்கள் இந்தப் போரை எதிர்க்கிறார்கள்’ என்று ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. உடனே செய்தி வாசிப்பாளர், டெலிபிராம்ப்டரில் காட்டப்படும் செய்தி வரிகளை சத்தமாக வாசிக்கத் தொடங்கினார். அதையும் மீறி மரினாவின் குரல் நேரலையில் ஒலித்து ரஷ்யர்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது. இதுதொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, ‘சேனல் ஒன்’ தொலைக்காட்சியில் வேலை செய்வது அவமானகரமானது என அவர் பேசிய காணொலியும் ஓவிடி-இன்ஃபோ எனும் மனித உரிமைக் குழு மூலம் வெளியாகியிருக்கிறது. அதில் ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பதிவுசெய்திருக்கிறார். “மனிதகுலத்துக்கு எதிரான இந்த அரசை நாம் மவுனமாக வேடிக்கை பார்க்கிறோம். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டது. அவமானத்துக்குரிய இந்தச் சகோதர யுத்தத்தால் அடுத்த 10 தலைமுறைகள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள முடியாது” என்றும் அவர் குமுறியிருக்கிறார். தனது தாய் ஒரு ரஷ்யர் என்றும், தந்தை உக்ரைனியர் என்றும் அந்தக் காணொலியில் அவர் கூறியிருக்கிறார்.

“இந்தக் கிறுக்குத்தனத்தை நிறுத்த, மக்களாகிய நம்மிடம் மட்டும்தான் சக்தி இருக்கிறது. போய்ப் போராடுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அவர்களால் நம் அனைவரையும் சிறையில் அடைத்துவிட முடியாது” என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது இந்த எதிர்ப்பு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் செய்தித் தொடர்பாளரும் மரினாவைப் பாராட்டியிருக்கிறார்.

இதற்கிடையே, அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in