`பல இன்னல்களைக் கடந்துதான் இந்தியா வந்திருக்கிறோம்'- இலங்கைத் தமிழர்கள் கண்ணீர்!

இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகள்

``கடல் கொந்தளிப்பு, மழை, பட்டினி எனப் பல்வேறு இன்னல்களை சந்தித்துதான் இந்தியா திரும்பியுள்ளோம். எங்களை கைவிடாமல் இந்த அரசுதான் காப்பாற்ற வேண்டும்“ என இலங்கையிலிருந்து தப்பித்து வந்த தமிழர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.

இலங்கை கலவரம்
இலங்கை கலவரம்

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரால், பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதிபருக்கு எதிராக இலங்கை மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வந்த நிலையில், நேற்று ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் இலங்கை முழுவதும் தொடர்கிறது வன்முறை. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் ராஜபக்சவின் உறவினர்கள் ஹெலிகாப்டரில் தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடி, வன்முறையைச் சமாளிக்க முடியாமல் இலங்கைத் தமிழர்களும் அகதிகளாகத் தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகள்

இலங்கை- இந்திய கடற்படையினர் கண்காணிப்பு வளையத்தைத் தாண்டி அவர்கள் இந்தியா வருவதற்குள் கடும் சவால்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனுடன் கடல் கொந்தளிப்பு, மழை உள்ளிட்ட கடுமையான இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதுவரை சுமார் 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரிடம் பேசினோம்.

இலங்கை அகதிகள்
இலங்கை அகதிகள்

திரிகோணமலையைச் சேர்ந்த தமிழர் ஶ்ரீகரன், ''திரிகோணமலை பக்கத்தில் எங்கள் கிராமம் இருக்கிறது. அங்கே டிரைவர் வேலை பார்த்து வந்தேன். டீசல் தட்டுப்பாட்டு இருந்ததால் இப்ப வேலையும் இல்ல. ஊரடங்கு, டீசல் தட்டுப்பாடு காரணமாக அங்கே வாழவே முடியல. இதையெல்லாம் சமாளிச்சு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு உழைச்சோம்னா, ரெண்டாயிரம் ரூபாய் செலவாகுது. அரசாங்க உதவியும் சரியா கிடைக்காது. ஏற்கெனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கம் வீடு கொடுத்தது. ஆனா அதில் வாழ முடியல. 2006ல அகதியா இந்தியா வந்துட்டோம். யுத்தம் முடிஞ்சு இலங்கையில அமைதி திரும்பியதால 2010ல் இலங்கைக்குப் போனோம். எங்களுக்கு வீடு கொடுக்காததால தங்குவதற்கும், வாழ்வதற்கும் முடியாமல் தவிச்சிகிட்டிருந்தோம். இப்ப இருக்கும் நிலையில உயிர் பிழைச்சா போதும்னு இந்தியா வந்திருக்கோம். இதற்கு ஒரு குடும்பத்திற்கு இரண்டு லட்சம் கேட்டாங்க. எங்களை அழைச்சுகிட்டு வந்தவங்க மன்னார்ல இருக்கும் மணல் திட்டுல இறக்கி விட்டுட்டு போயிட்டாங்க. குழந்தைகளோட இரவு முழுக்க மழையிலேயே நனைஞ்சுகிட்டிருந்தோம். கையில இருந்த டார்ச் அடிச்சு உதவி கேட்டுக்கிட்டே இருந்தோம். காலையிலதான் போலீஸ்காரங்க எங்களை மீட்டு சாப்பாடு கொடுத்தாங்க. வாழ வழி தெரியாம வந்த எங்களைத் திருப்பி அனுப்பாம இருக்க அரசாங்கம் உதவணும்” எனத் தழுதழுக்கிறார்.

உயிலங்குளத்திலிருந்து வந்துள்ள கஸ்தூரி, ''யுத்த காலத்தை விட இப்ப ரொம்ப மோசமான நிலை இருக்கு. கூலித் தொழிலாளியான எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கு. குழந்தைகளுக்குப் பால் பவுடர், கர்ப்பிணிக்கு மருந்து என எதுவும் கிடைக்கல. வீட்டு சாமான்களையும், நகையையும் வித்துத்தான் படகிற்கு காசு கொடுத்தோம். நெறைய பேர் இந்தியா வரனும்னு நெனைச்சாலும் அவங்ககிட்ட காசு இல்லை'' என்கிறார் கண்ணீர் மல்க.

நான்கு மாத குழந்தை முதல் 78 வயது முதியவர் வரையிலான 75 பேர் இதுவரை தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர். பாதியிலேயே இலங்கை கடற்படையிடம் சிக்கிய சிலர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தலா 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார சீரழிவின் பிடியில் சிக்கிய அவர்களுக்குத் தலைமேல் இடியாக இந்த அபராதம் இருக்கிறது. மேலும் இலங்கையிலிருந்து வரும் தமிழர்கள், மண்டபத்திலுள்ள ஈழத்தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனாலும் முறைப்படி அவர்கள் அகதிகளாகப் பதியப்படுவதில்ல. இதனால் மாதாந்திர நிதி உதவி, ரேஷன் பொருட்கள், வெளியிடங்களில் வேலை உள்ளிடவை கிடைப்பதில்லை. இதனால் அடைக்கலம் தேடி வரும் இலங்கைத் தமிழர்கள் சொந்த நாட்டின் பிரஜைகளாக வாழ முடியாமலும், அண்டை நாடுகளில் அகதிகளாக அங்கீகரிக்கப்படாமலும் திரிசங்கு நிலையில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in