தமிழர் தலைவர்களை தாஜா செய்ய கோத்தபய முயற்சி?

தமிழர் தலைவர்களை தாஜா செய்ய கோத்தபய  முயற்சி?

இலங்கையில் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரே அவருக்கு எதிராக நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோத்தபய இறங்கியுள்ளார்.

கரோனா பேரழிவு ஏற்படுத்திய தாக்கத்தாலும், அரசு மேற்கொண்ட சில பொருளாதார நடவடிக்கைகளாலும் இலங்கை மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையைச் சமாளிக்க சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இலங்கை அரசு திண்டாடி வருகிறது. இதன் காரணமாக, இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. இதன் காரணமாக, இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் தமிழகத்திற்கு அகதிகளாக புலம் பெயரத்துவங்கியுள்ளனர். மறுபுறம், இலங்கை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எனவே அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று சந்தித்தார். இது அவர் அதிபராக பொறுப்பேற்றபின் நடைபெற்ற முதல் சந்திப்பாகும். "நாட்டை மீண்டும் கட்டமைக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். அதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள்" என்று அவர் அப்போது வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அரசு தரப்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், சமல் ராஜபக்ச மற்றும் அலி சப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 48 அரசியல் கைதிகள் பத்து வருடங்களுக்கு மேலாக தடுப்பு காவலில் உள்ளதாகவும், இன்னும் பலர் வழக்குத் தொடராமல் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், 13-வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதுடன், வயல், வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நுழைய பொதுமக்களுக்கு இலங்கை ராணுவத்தினர் தடைவிதிக்கும் போகை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இவற்றிற்கு பதிலளித்த கோத்தபய ராஜபக்ச," வழக்கு தொடரப்பட்ட 48 தமிழ் அரசியல் கைதிகளின் விஷயத்தை ஆராய்ந்து சாதகமான முடிவை விரைவில் அறிவிப்போம். வழக்கு தொடரப்படாமல் உள்ள அரசியல் கைதிகள் விஷயத்தை அமைச்சர் அலி சப்ரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கூடி ஆராய்வு செய்வார்கள். ஒவ்வொருவரின் வழக்கையும் ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையை தன்னிடம் சமர்ப்பித்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

அதேசமயம், 13-வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தெரிவித்த கருத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த கூட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறுகையில், " ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுடன் நாடு செழுமையை நோக்கிச் செல்லும். நாம் ஒரு நாடாக ஒன்றிணைய வேண்டும். ஒரே நாடு, ஒரே தேசம் என்ற நிலையில் தற்போதைய சவால்களை முறியடிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அனைவரின் பொறுப்பு" என்று கூறினார்.

கடந்த 2019 நவம்பவர் மாதம் அதிபர் கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து சந்திப்பை நடத்தும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பலமுறை வலியுறுத்தினர். ஆனால், இரண்டு முறை எந்த காரணமும் இல்லாமல் கடைசி நேரத்தில் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. "இலங்கையில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தமிழர் அமைப்பு தலைவர்களை அழைத்து வாக்குறுதி கொடுப்பதும், நிலைமை சீரானதும் கொடுத்த வாக்குறுதியை மீறுவதும் இலங்கை அரசின் குணம். இந்த முறையாவது இலங்கை அரசு சொன்னபடி நடந்துகொள்ளும் என்று நம்புவோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in