
இரண்டு நாள் நல்லெண்ண பயணமாக இலங்கை சென்ற மத்திய இணை அமைச்சர் முருகன், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினார். இந்தியா உதவியுடன் நடைபெறும் கோயில் கட்டுமானப்பணிகளை எல்.முருகன் இன்று பார்வையிட்டார்.
இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் 2 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றனர். விமானம் மூலம் நேற்று மாலை இலங்கை சென்றடைந்த இருவரையும் பலாலி விமான நிலையத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இருவரும் பங்கேற்றனர். இதன்பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வரர் கோயிலில் இருவரும் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு இந்திய அரசு நிதியுடன் நடைபெற்றுவரும் கோயில் கட்டுமான பணிகளைப் பார்வையிட்டு, கோயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைதொடர்ந்து இந்திய-இலங்கை நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் நடந்த தலைமைப் பண்பு கருத்தரங்கில் குடும்ப பெண்களுக்கு உலர் தீவன பொருட்களை வழங்கினர். இலங்கை பிரதமர் ரணில் விக்ரசிங்கே தலைமையில் நாளை நடைபெறவுள்ள கலாச்சார விடுதி திறப்பு விழாவில் எல்.முருகன், அண்ணாமலை கலந்து கொள்கின்றனர்.