உள்நாட்டுக் கலவர அபாயத்தில் இலங்கை!

உணவுப் பஞ்சத்தால் அகதிகளாய் கிளம்பும் மக்கள்
உள்நாட்டுக் கலவர அபாயத்தில் இலங்கை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக வீதிகளில் இறங்கி ஆட்சிக்கு மாற்றத்திற்காக போராடிய மக்கள், இப்போது உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு உணவுப் பஞ்சம் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் இப்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரிசை நிற்கிறது. போட்டி நிறைந்த உலகில் பொருள் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு கொலை வரை சென்றுகொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு நிலையை 1970 முதல் 1977-ம் ஆண்டு வரை இலங்கை மக்கள் சந்தித்தனர்.

அப்போது நடந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் வெளிநாட்டு பொருட்களுக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு, உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை இலங்கையில் கடும் பஞ்சத்தை ஏற்படுத்தியது. பசி, பட்டினியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். மக்கள் ஆயிரக் கணக்கில் தங்கள் சொந்த பூமியை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் புகலிடம் தேடினர். அந்த வரலாறு மீண்டும் திரும்பும் அபாயத்தில் இருக்கிறது இலங்கை.

"இலங்கையின் உணவு பஞ்சம் காரணமாக 40 முதல் 50 லட்சம் பேர் வரை நேரடியாகப் பாதிக்கப்படலாம்" என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரிக்கிறார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு திட்டங்களுக்கு எம்பி-க்கள் அனைவரும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே, நாட்டில் தரிசாய் கிடக்கும் 1500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை விளை நிலைங்களாக மாற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என எச்சரிக்கைகள் வருகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது கோத்தபய ராஜபக்ச, இயற்கை விவசாயம் என்ற முழக்கத்தை முன் வைத்தார். அதிபரானதும் ரசாயன உரங்களின் பயன்பாட்டைப் படிப்படியாக அகற்றப் போவதாகவும் அறிவித்தார். இதன்படி 2010 ஏப்ரல் 29-ம் தேதி ரசாயன உரங்களுக்குத் தடை செய்யும் சட்டத்தை அவர் பிரகடனப்படுத்தினார்.

இலங்கை அரசின் இந்த அவசரச் சட்டத்திற்கு முன்பே, தீடீரென இயற்கை விவசாயத்துக்கு மாறுவதால், விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கும் என்று அந்நாட்டு மக்கள் எச்சரித்தனர். அதை அரசு செவிமடுக்கவில்லை. இயற்கை உரத்தைப் பயன்படுத்த மக்கள் முயற்சித்தபோது, அவை போதுமான அளவு கிடைக்கவில்லை. செயற்கை உரமும் தடைசெய்யப்பட்டதால் மொத்த விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பொருளாதார நெருக்கடியை பிரகடனம் செய்தது இலங்கை அரசு. உணவுப் பொருட்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயம் செய்தது. பணவீக்கத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் மேலும் மேலும் சிக்கலையே ஏற்படுத்தியது.


இலங்கையின் பொருளாதார சுழற்சியே சுற்றுலா, தேயிலை, ஆயத்த ஆடை ஏற்றுமதியை நம்பித் தான் உள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருந்தது. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி ஆண்டுக்கு 125 கோடி டாலராகும். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் தேயிலையின் பங்கு 10 சதவீதம். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தேயிலை ஏற்றுமதியையும் பாதித்தது. இதனால் கடுமையான வருமான இழப்பை இலங்கை சந்தித்தது. அது தேயிலைத் தொழிலை நம்பியிருக்கும் 30 லட்சம் தொழிலாளர்களையும் நேரடியாகப் பாதித்தது.


கரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட தொய்வும் இலங்கைக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுற்றுலாத்துறை 2019-ம் ஆண்டு 12.5 சதவீத பங்களிப்பைச் செய்துள்ளது. 2018-ம் ஆண்டு இலங்கைக்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 2020-ல் அது 1.9 மில்லியனாக குறைந்தது. கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு இலங்கையின் சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது. இதனால் இலங்கையின் அந்நியச் செலாவணி வரவும் முற்றிலும் நின்று போனது. அத்துடன் இலங்கை ரூபாயும் பெரிய அளவில் மதிப்பிழந்தது. இதன் காரணமாக, அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. எரிபொருள் பற்றாக்குறையும் மக்களைப் படுத்தி எடுக்கிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.

டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்காத நிலையும் நீடிக்கிறது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. இதனிடையே, எரிபொருள் தேவை உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் வாரம் ஒரு முறை ரேஷன் முறையில் அவர்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விநியோகிக்கப்படும். இந்த முறை அடுத்த மாதம் அமலுக்கு வரும் என்று எரிசக்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினையால் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து பட்டினியால் தவித்து வருகின்றனர். அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

பாரதி ராஜநாயகம்.
பாரதி ராஜநாயகம்.

இலங்கையின் தற்போதைய நிலைகுறித்து அந்நாட்டின் மூத்த பத்திரிகையாளரான பாரதி ராஜநாயகத்திடம் பேசினோம். “ரசாயன உரங்களுக்கு தடை விதித்தது தான் இப்போது ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்துக்கு முக்கிய காரணம். எரிபொருள் விலை உயர்வால் விவசாயமும் இப்போது நடைபெறவில்லை. விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டார்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. டிராக்டர்களையும் இயக்க முடியவில்லை. இதனால் உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டுத் தோட்ட பயிர் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கான செயல்திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அரசு ஊழியர்க்ளை 2 வாரங்களுக்கு வீட்டில் இருந்தே வேலைசெய்யச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளும் 2 வாரங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகள் 90 சதவீதம் மூடப்பட்டுள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட பேக்கரிகள் எரிவாயு கிடைக்காமல் மூடப்பட்டுள்ளன. உணவுப் பொருள் தடுப்பாட்டால் தினமும் 2 வேளை மட்டுமே உண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருளாதாரத்தை பலப்படுத்த அரசிடம் திட்டமில்லை. அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியைத் தான் இலங்கை நாடியுள்ளது. அவர்களின் உத்தரவுப்படி வரிகள் மேலும் உயர்த்தப்படலாம். மானியங்கள் குறைக்கப்படலாம். அரசுத்துறைகள் தனியார் மயமாக்கப்படும். இதன் மூலம் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

இனி இலங்கையில் வாழ வழியில்லை என தெரிந்துபோனதால் மக்கள் அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இருக்கும் சொத்தை விற்றுவிட்டு எப்படியாவது இலங்கையில் இருந்து தப்பி விட வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான மக்களிடம் உள்ளது. உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் மிகப்பெரிய கலவரத்திற்கு நாடு தள்ளப்படும் அபாயமும் உள்ளது” என்று அச்சம் தெரிவித்தார் அவர்.

கடலால் சூழப்பட்ட இலங்கை தற்போது கடனால் சூழப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலையில் இருக்கும் இலங்கை அரசு இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதென்பது அத்தனை சுலபமான காரியமாகத் தெரியவில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in