‘5 பில்லியன் டாலர் இருந்தால் மட்டுமே நெருக்கடி குறையும்' - இலங்கை பிரதமர் கவலை

‘5 பில்லியன் டாலர் இருந்தால் மட்டுமே நெருக்கடி குறையும்' - இலங்கை பிரதமர் கவலை

இலங்கையின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக எரிபொருள், உணவு, மருந்து மற்றும் உரங்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, “எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3.3 பில்லியன் டாலர்கள் உட்பட மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தைக் காப்பதற்கு இலங்கைக்கு அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 5 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினால் மட்டும் போதாது, முழுப் பொருளாதாரத்தையும் மறுசீரமைக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இலங்கையின் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையை மேம்படுத்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் ரணில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். வேளாண்மைக்காக உரங்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து 55 மில்லியன் டாலர் கடனுதவி பெறுவதற்கும் இலங்கையின் அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in