(இடமிருந்து வலம்) மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச
(இடமிருந்து வலம்) மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச

இனவாதத்தால் இலங்கையை அழித்த ராஜபக்ச குடும்பம்!

“உணவு, எரிபொருள், மின்சாரத் தட்டுப்பாடு இன்னும் மோசமான நிலையை எட்டும். நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளதால் உடனடியாக நாம் அதை ஆராய வேண்டும். இல்லையென்றால் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளது” என 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்தன கூறிய வார்த்தைகள் நம் அண்டை நாட்டின் அவல நிலையைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன. அதைவிட மிகவும் மோசமான ஆரூடத்தை முன்னாள் அமைச்சர் விஜயதாசா ராஜபக்ச கூறியிருக்கிறார். “இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓடும்” என்பதுதான் அவரது எச்சரிக்கை.

அபரிமிதமான இயற்கை வளம், அறிவும் உழைப்பும் மிக்க மனித வளம் கொண்ட ஒரு தேசம் இப்படிச் சீரழிந்து கிடப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தின் மோசமான நிர்வாகமும், அப்பட்டமான சிங்கள பவுத்த தேசியவாதமும்தான் காரணம் என்கிறார்கள்.

அவதியின் உச்சத்தில் மக்கள்

இன்றைய தேதிக்கு, உலகிலேயே மிகக் குறைவான மதிப்பு கொண்ட கரன்ஸி எனும் நிலைக்கு இலங்கை ரூபாய் தள்ளப்பட்டிருக்கிறது. டாலருக்கு நிகரான அதன் மதிப்பு 30 சதவீதத்துக்கும் மேலாகக் குறைந்திருக்கிறது. எரிபொருள் வாங்குவதற்கான கடனுதவியாக இந்தியா 500 மில்லியன் டாலரை வழங்கிவிட்ட நிலையில், அதை வைத்து வாங்கிய எரிபொருளும் விரைவாகத் தீர்ந்துவருகிறது. இந்த மாத இறுதியில், கையிருப்பில் உள்ள மொத்த டீசலும் காலியாகிவிடும் எனும் அச்சம் எழுந்திருக்கிறது. கடும் மின்வெட்டு காரணமாக தேயிலைத் தோட்டங்கள், ஜவுளித் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்துத் தொழில்களும் நிலைகுலைந்திருக்கின்றன. கையிருப்பில் இருந்த அந்நியச் செலாவணி மொத்தமாகக் கரைந்துவிட்ட நிலையில், இலங்கையில் உச்சகட்ட காட்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இலங்கை அரசுக்கு எதிராக உக்கிரமடையும் போராட்டம்...
இலங்கை அரசுக்கு எதிராக உக்கிரமடையும் போராட்டம்...

கண்ணீர்ப் புகைகுண்டு, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது என எதைச் செய்தாலும் மக்கள் வீதிகளில் திரண்டுகொண்டேயிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுசெல்லப்படுபவர்கள் அங்கு சித்திரவதை செய்யப்படுகிறார்கள். மனித உரிமைகள் விஷயத்தில் ஏற்கெனவே மிக மோசமான நிலையில் இருக்கும் இலங்கை அரசு, இந்தப் போராட்டங்களை எதிர்கொள்ளும் விதமும் அதிர்ச்சியளிக்கிறது. அதையெல்லாம் கடந்து அரசுக்கு எதிராகப் போர் முரசு கொட்டுகிறார்கள் மக்கள். பால் பவுடருக்குக்கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை, 13 மணி நேர மின்வெட்டு என நரகமாகிக் கிடக்கும் நாட்டில், மக்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

அசைந்து கொடுக்காத அதிபர்

இத்தனைக்குப் பின்னரும் பதவிவிலக மறுக்கிறார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. உலகளாவிய நடப்புகளின் தாக்கம்தான் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம் என்று சப்பைக் கட்டுகிறார். “69 லட்சம் பேர் வாக்களித்து அதிபரானவர் கோத்தபய. எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் பதவிவிலக மாட்டார்” என்று அரசுக் கொறடா ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.

அதிகாரத்தைக் குவித்துக்கொள்வது, அரசுப் பதவிகளில் குடும்பத்தினரை அமரச் செய்து அதிகாரம் செலுத்துவது என ஆடித்தீர்த்த கோத்தபய, இப்போதும் விட்டுக்கொடுக்க மறுக்கிறார். அனைத்துக் கட்சிகளும் இணைந்த அரசை உருவாக்க அவர் விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியினரே புறக்கணித்துவிட்டனர். தனது பதவிக்கு நெருக்கடி முற்றியதும், நெருக்கடி நிலைப் பிரகடனத்தைத் திரும்பப் பெற்று தந்திரமாகத் தப்பித்துக்கொண்டார். தற்போது அவருக்கு எதிராக, பதவிநீக்கத் தீர்மானத்தையும், நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவரும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியிருக்கின்றன.

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்குவதை சாக்காக வைத்து விடுமுறை நாட்களை அதிகரித்திருக்கிறது அரசு. இலங்கை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துவரும் ஐநா மனித உரிமை ஆணையம், ராணுவமயத்தில் அதிகக் கவனம் செலுத்தியது, அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுவிழக்கச் செய்தது என அவர் மீது பல விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.

சரிவுக்குக் காரணங்கள்

2019 ஏப்ரல் 11-ல் ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தின்போது இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சுற்றுலா பயணிகளின் வருகையைக் குறைக்கத் தொடங்கிவிட்டது. அதன் பின்னர் பெருந்தொற்றுப் பரவல், இயற்கை விவசாயம் எனும் பெயரில் ரசாயன உரங்களுக்குத் தடைபோட்டதால் விளைச்சலில் உருவான பெரும் சரிவு என ஏகப்பட்ட பிரச்சினைகள் இலங்கையைப் புரட்டிப்போட்டன. கூடவே, சர்வதேச அளவில் பொருளாதார சக்தியாக சீனா நிலைபெறுவது தங்களுக்குச் சாதமான பலன்களைத் தரும் எனக் கணக்குப் போட்டது இலங்கை. மேற்கத்திய நாடுகளையும், இந்தியாவையும் விட்டு ஒதுங்கியும் நின்றது. அதன் பலனை இன்று அனுபவிக்கிறது.

கோத்தபய ராஜகபக்ச
கோத்தபய ராஜகபக்ச

இலங்கையின் பொருளாதாரச் சிக்கலுக்கு வித்திட்ட ராஜபக்ச குடும்பத்தின் தான்தோன்றித்தனமான முடிவுகள் என்றால், அவற்றைச் செயல்படுத்தியவர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் தான். கோத்தபயவால் நியமிக்கப்பட்ட அஜித் கப்ராலின் செயல்பாடுகள்தான், அந்நியச் செலாவணி கையிருப்பு கரைய முக்கியக் காரணம். தற்போது அவர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட முடியாதபடி நீதிமன்றம் அவருக்குப் பயணத் தடை விதித்திருக்கிறது. ஏப்ரல் 18-ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பன்னாட்டு நாணய நிதியத்தை அணுகுவதுதான் இறுதித் தீர்வு என எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் கூறிவந்த நிலையில், கோத்தபய அரசு அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்ததற்கு முக்கியக் காரணம், சுற்றுலாத் துறை எப்படியாவது மீண்டுவிடும்; சீனாவிடமிருந்து உதவிகள் கிடைக்கும் என்பதுதான். சுற்றுலாத் துறையின் சுணக்கம் மெல்ல விடுபட ஆரம்பித்துவிட்டாலும், உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால், இறக்குமதி இன்னும் சிக்கலைச் சந்தித்தது. அதனால்தான், வீட்டில் மதுபானக் கூடம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியாக வாழ்ந்தவர்கள்கூட, விலைவாசி உயர்வைத் தாங்க முடியாமல் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அப்படியெனில், ஏழைகளின் நிலைமை எப்படி இருக்கும் என நினைத்தே பார்க்க முடியவில்லை.

சிங்கள பவுத்த தேசியவாதம்

2004-ல், மகிந்த ராஜபக்ச முதன்முறையாகப் பிரதமராகி, அடுத்த ஆண்டில் அதிபரானது முதல் சிங்கள பவுத்த தேசியவாதத்தை வளர்க்கும் பணிகளே முதன்மையாக இருந்தன. அதன் மூலம் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான அரசியல் சமூகக் கட்டமைப்பை வெற்றிகரமாக நிறுவவும் செய்தனர். 2009 இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகளை அழித்தது ராஜபக்ச குடும்பத்தினருக்குப் பெரும் வலிமையைச் சேர்த்தது. இடையில் ஏற்பட்ட சரிவையும் கடந்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர். அதற்குக் கைகொடுத்ததும் சிங்கள தேசியவாதம்தான். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் எழுந்த எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டே சிங்கள பவுத்த தேசியவாதத்தை வலுப்படுத்தி அதன் மூலம் தன்னையும் தனது குடும்பத்தையும் வளப்படுத்திக்கொண்டார் கோத்தபய.

பவுத்த துறவிகளுடன் கோத்தபய...
பவுத்த துறவிகளுடன் கோத்தபய...

தமிழர்களுடனான நல்லிணக்கத்தை வலியுறுத்திய இந்தியாவைவிடவும், சீனாவுக்கே அதிக முக்கியத்துவம் தந்த இலங்கை, அந்நாட்டின் பக்கம் முழுவதுமாகச் சாய்ந்தது. அதற்கு அடித்தளமாக இருந்தது சிங்கள தேசியவாதம்தான். பொருளாதாரக் கொள்கைகளின் அடிநாதமாக இருந்ததும் அதே தேசியவாதம்தான்.

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த சில நாட்களிலேயே, “முஸ்லிம் பயங்கரவாதத்தை வேரறுக்க, நான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்” என்று அறிவித்த கோத்தபய, வென்ற பின்னர், “சிங்கள மக்களின் ஆதரவு மட்டும் இருந்தாலே வென்றுவிடலாம் என்பது எனக்கு முன்பே தெரியும். எனினும், எனது வெற்றியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், எனது எதிர்பார்ப்பை அவர்களது எதிர்வினை பூர்த்திசெய்யவில்லை” என்று அச்சுறுத்தும் வகையில் பேசினார்.

அடுத்த சில மாதங்களில், “அதிபரும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால்தான் நல்லது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேயும் விலக வேண்டும்” எனப் பேச ஆரம்பித்து, பின்னர் அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார் மகிந்த ராஜபக்ச. அவரது மகன் நமல் ராஜபக்ச, அண்ணன் சமல் ராஜபக்ச, தம்பி பசில் ராஜபக்ச என ராஜபக்ச குடும்பம்தான் மொத்த அரசையும் நிர்வகித்தது.

மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச

ஒருபக்கம் வெளிநாடுகளிடமிருந்து கடன் வாங்கியது, மறுபக்கம் ராணுவத்துக்கான செலவை அதிகரித்தது என ராஜபக்ச குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே செய்துவந்த அராஜகத்தின் விளைவை, இன வேறுபாடின்று எல்லோருமே எதிர்கொண்டிருக்கின்றனர். இன்று அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் மாணவர்கள், அரசு அலுவலர்கள், கிறிஸ்தவ பாதிரியார்களுடன் புத்த பிட்சுகளும் இருக்கிறார்கள்.

காத்திருக்கும் சவால்கள்

ஜூலை மாதம் 25-ம் தேதிக்குள் 1 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை அடைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இலங்கை. அதற்கு, முதலில் அரசியல் ஸ்திரத்தன்மை தேவை. சர்வதேச அளவில் கடன் வழங்கும் அமைப்புகளிடமிருந்து கடன் பெற்றால்தான், வெளிநாட்டுக் கடன்களை அடைக்க முடியும். இன்றைய தேதியில் அந்நியச் செலாவணியில் 16 சதவீதம்தான் கையிருப்பாக உள்ளது.

பன்னாட்டு நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை இலங்கை அரசு தொடங்கியிருக்கிறது. மத்திய வங்கியின் ஆளுநராக பி.நந்தலால் வீரசிங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பது ஒரு சாதகமான அம்சம். பன்னாட்டு நாணய நிதியத்துக்கு அளிக்க வேண்டிய கடிதத்தைத் தயாரிக்கும் பொறுப்பை மத்திய வங்கியின் துணை ஆளுநராக இருந்த கே.எம்.எம்.ஸிறிவர்தனாவுக்கு அளித்திருக்கிறார் கோத்தபய.

குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் இலங்கை மக்கள்...
குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் இலங்கை மக்கள்...

அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், நிதியமைச்சராக்கப்பட்ட நீதித் துறை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, பதவியேற்ற ஒரே நாளில் பதவி விலகினார். எனினும் நிதிப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வராததால் வேறு வழியின்றி பதவியில் நீடிக்கிறார். 51 பில்லியன் டாலர் கடன் சுமையைச் சமாளிக்கும் மிகப் பெரிய சுமை அவர் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. கூடவே, ஒரு பொருளாதார நிபுணர் குழுவையும் கோத்தபய நியமித்திருக்கிறார்.

இருந்தாலும், இலங்கை மக்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பது கண்ணுக்கெட்டும் தொலைவில் தென்படவே இல்லை. பன்னாட்டு நாணய நிதியம் விதிக்கப்போகும் நிபந்தனைகளை நிறைவேற்ற, மக்களைக் கசக்கிப் பிழியும் வேலையைத்தான் இலங்கை அரசு செய்யும். மொத்தத்தில் இனவாதப் பெருமிதம் என்ன செய்யும் என்பதற்குச் சரியான உதாரணமாகியிருக்கிறது இலங்கை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in