தப்பிய கோத்தபய... கொந்தளிக்கும் மக்கள்: அமலானது அவசரநிலை பிரகடனம் !

தப்பிய கோத்தபய... கொந்தளிக்கும் மக்கள்: அமலானது அவசரநிலை பிரகடனம் !

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் இன்று(ஜூலை-13) கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் பதவி விலகாமலேயே இன்று அதிகாலையில் சிறப்பு விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பி சென்றதாக விமானப்படையின் அறிக்கை வெளியானது.

இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மறுபடியும் கொழும்புவில் குவியத் தொடங்கியுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகக்கோரி முழக்கமிட்டபடி அவரின் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரள ஆரம்பித்துள்ளனர். இவர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனவே இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிபர் கோத்தபய ராஜினாமா செய்தவுடன், இலங்கை அரசியலமைப்பின்படி, பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இடைக்கால ஜனாதிபதியாக இருக்கவேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அனைத்துக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 9-ம் தேதி ட்வீட் செய்திருந்தார். ஆனால் மக்கள் ரணிலுக்கு எதிராகவும் கடுமையாக போராட தொடங்கியுள்ளனர். இதனால் ஒருவேளை ரணிலும் தனது பதவியை ராஜினாமா செய்தால் சபாநாயகர் இடைக்கால அதிபராக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in