பாலியல் தொழிலுக்கு முடிவுகட்டும் ஸ்பெயின்

அநீதிகள் நிறைந்த வரலாறும் மறுவாழ்வுக்கான தேவையும்
பாலியல் தொழிலுக்கு முடிவுகட்டும் ஸ்பெயின்

அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் அளிக்கும் வாக்குறுதிகளும், திட்டங்களும் பலதரப்பட்டவை. வறுமையை ஒழிப்போம், வேலை வாய்ப்பைப் உருவாக்குவோம், வரிகளைக் குறைப்போம் – வசதிகளைப் பெருக்குவோம் என்றெல்லாம்தான் வாக்குறுதிகள் இருக்கும். இவை சிரஞ்சீவித்தன்மை வாய்ந்தவை. என்றைக்கும் உலகின் எந்தப் பகுதிக்கும் பொருந்துபவை. ஆனால், ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ் பாலியல் தொழிலை ஒழிப்போம் என்றும், அதில் ஈடுபடுவது குற்றச்செயல் என்று சட்டமியற்றப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம், தேர்தலில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் துணிச்சலுடன் முன்வந்திருக்கிறார்.

உலகிலேயே பாலியல் தொழிலில் 3-வது இடத்தில் இருப்பது ஸ்பெயின். தாய்லாந்து முதலிடத்திலும் போர்ட்டோரிகோ இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. ஸ்பெயின் நாட்டில், பாலியல் தொழில் குற்றச்செயல் அல்ல என்று 1995-ல் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பு 2016-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, பாலியல் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 420 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு அந்நாட்டில் பணம் புரளுகிறது. 2009 கணக்கின்படி, நாட்டின் 3-ல் ஒரு பங்கு ஆடவர்களுக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு இருக்கிறது.

இந்தத் தொழிலில் இருக்கும் பெண்கள் அடிமைகளாகவே காலம்தோறும் நடத்தப்படுகின்றனர். பிணி, மூப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகும்போது நிராதரவாக வீதிகளில் விடப்படுகின்றனர்.

சமுதாய நோய்

உலகிலேயே மிகவும் பழமையான தொழில் பாலியல் தொழில் என்பார்கள். ஆனால், இது வேதனை மிகுந்த ஒரு அவலம். இந்தத் தொழிலில் எந்தப் பெண்ணும் விரும்பி ஈடுபடுவதே இல்லை. வறுமை மட்டுமே கூட இதற்குக் காரணம் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் வாழும் பெண்ணாக இருந்தாலும் வறுமையைப் போக்க உழைப்பதற்குத் தயாராகவே இருக்கின்றனர். வேலைக்குச் செல்வதற்கான படிப்பு இல்லாவிட்டாலும்கூட முடிந்த வேலைகளைச் செய்கின்றனர். பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போவதுகூட, தங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுடைய பசியைப் போக்கவும் நோயாளிகளுக்கு மருந்து – மாத்திரை வாங்கவும்தான். அவர்களுமே பாலியல் தொழிலைப் பணத்துக்காகக்கூட செய்ய விரும்புவதில்லை.

இந்த வேலையைச் செய்யும் சூழலையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்துவது ஆண்கள்தான். அதிலும் முறைகேடான செயல்களால் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கும் ஆண்கள்தான், இந்தத் தொழிலை உலகம் முழுவதும் தலைமையேற்றுச் செய்கின்றனர். இவர்களுக்கு அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் துணைநிற்பதால், மிகப் பெரிய சமூகவிரோத கும்பல்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காகவே, ‘அதிக சம்பளத்தில் வேலை’ என்று ஆசை காட்டப்பட்டு வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அப்பாவிப் பெண்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறகு, அவர்களை வலையில் சிக்கவைத்துவிட்டு, அவர்களை வைத்தே பணம் சம்பாதிக்கும் அக்கிரமத்தைச் செய்கிறார்கள் சமூகவிரோதிகள்.

இந்தத் தொழிலில் இருக்கும் பெண்கள் அடிமைகளாகவே காலம்தோறும் நடத்தப்படுகின்றனர். பிணி, மூப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகும்போது நிராதரவாக வீதிகளில் விடப்படுகின்றனர். இந்நிலையில், அவர்களால் தங்களுடைய சொந்தக் குடும்பங்களுக்குக் கூடத் திரும்பிச் செல்ல முடிவதில்லை. இது ஒரு தொழில்கூட அல்ல, ஒரு சமுதாய நோய். எனவே, இதைத் தடுக்க சட்டம் இயற்றப் போவதாகக் கூறியிருக்கும் சாஞ்சேஸ் பாராட்டப்பட வேண்டியவர்.

நடைமுறைச் சிக்கல்கள்

2011-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, பாலியல் தொழிலுக்கான மிகப் பெரிய மையமாக ஸ்பெயின் உருவெடுத்திருக்கிறது. அந்நாட்டில் பாலியல் தொழிலுக்குக் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. விரும்பி இத்தொழிலைச் செய்யும் பெண்களைத் தண்டிப்பதும் கிடையாது. பொது இடங்களில் உறவு கொள்ளக்கூடாது என்பது மட்டும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது. அதே சமயம், ஒரு பெண்ணுக்கு வாடிக்கையாளரைப் பிடிப்பது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுகிறது.

பாலியல் தொழில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் சாஞ்சேஸ் அறிவித்திருந்தாலும், அவ்வளவு எளிதில் இதைச் செய்ய முடியாது. இதுநாள் வரையில் இத்தொழில் மூலம் கோடீஸ்வரர்களான கயவர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் அவ்வளவு எளிதில் தங்களுடைய வருமானத்தை விட்டுத்தர முன்வர மாட்டார்கள். ஸ்பெயினில், இப்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ்

பாலியல் தொழில் சட்டவிரோதச் செயலாக அறிவிக்கப்படும் என்று 2019 தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்தார் சாஞ்சேஸ். இது பெண்களின் வறுமையைச் சாதகமாக்கிக்கொள்ளும் கொடூரமான செயல் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான கொடூரங்களில் மிகவும் வன்மையானது என்றும் அந்த வாக்குறுதியில் சாஞ்சேஸ் குறிப்பிட்டிருந்தார். பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இந்த வாக்குறுதி என்று மாற்றுக் கட்சிக்காரர்கள் அவரைக் கேலி செய்தனர்.

தேர்தலில் அவர் வென்று ஆட்சியைப் பிடித்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் அது தொடர்பாகச் சட்டமியற்றப்படவில்லை. இந்நிலையில், ஸ்பெயின் பிரதமரின் புதிய அறிவிப்பு நம்பிக்கை ஊட்டுகிறது.

கண்ணீர்க் கதைகள்

2017-ல் மட்டும் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 13,000-க்கும் மேற்பட்டோர், இத்தொழிலில் ஈடுபட தாங்கள் விரும்பியதே இல்லை என்றும் சமூக விரோதிகள்தான் தங்களை இந்த நரகத்தில் கொண்டுவந்து தள்ளிவிட்டனர் என்றும் வேதனையோடு தெரிவித்திருக்கின்றனர். பாலியல் தொழிலை ஒழிக்க வேண்டும் என்போர்கூட, அத் தொழிலை ஒழித்துவிட்டால் சபல புத்தியுள்ள ஆண்கள் வடிகால்கள் இல்லாமல், பாதுகாப்பற்ற பிற பெண்களை நாசப்படுத்திவிடுவார்கள் என்று எச்சரிக்கின்றனர். ஆனால், அதெல்லாம் பிற்போக்கு எண்ணங்கள். ஆணாத்திக்கத் திமிரின் அடிப்படையில் வைக்கப்படும் இந்த வாதங்கள் எந்த வகையிலும் நியாயமற்றவை. ஆபத்தானவை!

இந்தியாவில்கூட பெருநகரங்களுக்கு வேலை தேடி வரும் பெண்கள், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்காகக் கோபித்துக்கொண்டு வெளியேறி - போக இடமில்லாமல் தடுமாறும் பெண்கள், திரைப்பட நட்சத்திரமாகிவிட வேண்டும் என்று விரும்பும் பெண்கள், பெற்றோரையும் உற்றோரையும் இழந்துவிடும் ஆதரவற்றச் சிறுமிகள் என்று பலரையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது பல காலமாக நடந்துவருகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரங்கள் நிறைந்த உலகம் அது. ஸ்பெயின் பிரதமரைப் போல, இந்திய அரசியல் கட்சிகளும் இதை ஒரு சமூகத் தீமையாகக் கருதி ஒழிக்க வேண்டும். குழந்தைத் திருமணம், உடன் கட்டையேறுதல் போன்ற கொடிய வழக்கங்கள் எந்த அளவுக்கு அவமானகரமானவையோ அந்த அளவுக்குப் பாலியல் தொழிலும் அவமானகரமானது.

அதேவேளையில், ஆணாதிக்க எண்ணங்கள், பிற்போக்குப் பழக்கவழக்கங்கள் போன்றவை நிறைந்த சமூகத்துக்கு அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை இழிவாகக் கருதும் அளவுக்குப் பெரிய யோக்யதையும் கிடையாது. சட்டத்தின் பெயரில் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அத்துமீறல்களும் நாம் அறியாததல்ல. தற்போது பாலியல் தொழிலாளர்கள் குறித்த சமூகப் பிரக்ஞையும் அவர்களது உரிமைகள் குறித்த புரிதலும் ஓரளவுக்கு உருவாகியிருக்கிறது.

பாலியல் தொழில் என்பது பெண்களை அடிமையாக்கி, நாசமாக்கும் வக்கிரம் என்பதை அனைவரும் ஏற்று அத்தொழிலுக்கு ஒரு முடிவு கட்டுவதே நல்லது.

முழுமையான விடுதலை வேண்டும்

உலகின் முதல் 2 உலகப் போர்கள், கோவிட்-19 பெருந்தொற்று போல, பல ஏழைக் குடும்பங்களின் பெற்றோரைப் பலிவாங்கும் நோய்கள், பெரிய அணைகளைக் கட்டுவதற்காக கிராமங்களைவிட்டு ஆயிரக் கணக்கானோரை வெளியேற்றும் அரசியல் நடவடிக்கைகள், புயல் – நிலநடுக்கம், பெருமழை போன்ற பேரழிவுகளால் வீடு வாசல்களை இழந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறும் சூழல், உள்நாட்டுப் போரில் அகதிகளாக மக்கள் வெளியேறும் நிலை ஆகியவற்றாலும் பாலியல் தொழிலுக்கு அப்பாவிகளை நிர்ப்பந்திப்பது சமூக விரோதிகளுக்கு எளிதாகிவிடுகிறது. எனவே, பாலியல் தொழில் என்பது பெண்களை அடிமையாக்கி, நாசமாக்கும் வக்கிரம் என்பதை அனைவரும் ஏற்று அத்தொழிலுக்கு ஒரு முடிவு கட்டுவதே நல்லது.

மிக முக்கியமாக, பாலியல் தொழிலில் ஈடுபட்டுப் பெயரளவுக்கு வருமானம் ஈட்டிவந்த பெண்கள், அந்தத் தொழிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தரவும், சமூகத்தில் அவர்களைக் குறித்த பிற்போக்குப் பார்வைகளைக் களையும் வகையில், விழிப்புணர்வை உருவாக்கவும் அரசுகளிடம் செயல்திட்டம் இருக்க வேண்டும். அப்போதுதான், பாலியல் தொழில் எனும் சமூக அவலத்திலிருந்து அவர்களின் விடுதலை முழுமையடையும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in