குப்தா சகோதரர்கள் கைது: முடிவுக்கு வரும் ‘ஜூப்தா சகாப்தம்’!

குப்தா சகோதரர்கள் கைது: முடிவுக்கு வரும் ‘ஜூப்தா சகாப்தம்’!
குப்தா சகோதரர்கள்

இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பிழைக்கச் சென்ற சகோதரர்கள் மூவர், அந்நாட்டின் அதிகாரம், ஆட்சி, அரசு சொத்து என அனைத்தையும் சூறையாடியது தொடர்பாக, அங்கே பெருந்தொற்று காலத்தில் பெரும் கலவரம் மூண்டது. நாட்டைவிட்டு தப்பியோடிய இந்த இந்திய சகோதரர்களை நீண்ட போராட்டத்துக்கு பின்னர் வளைத்திருப்பதாக தென்னாப்பிரிக்கா உறுதி செய்துள்ளது.

கரோனா பரவலின் மத்தியில் உலகமே திமிலோகப்பட்டதன் மத்தியில் தென்னாப்பிரிக்க தேசம் இன்னொரு பிரச்சினையிலும் அலைக்கழிந்தது. இந்திய பின்னணியிலான குப்தா சகோதர்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் மற்றும் கலவரங்கள் மூண்டன. மக்களின் கொதிப்பை அடக்க, தெருக்களில் ராணுவத்தை களமிறக்கும் அளவுக்கு அங்கே நிலைமை மோசமானது. அந்தளவுக்கு ’குப்தாகேட்’ என்று அழைக்கப்படும் ஊழல்கள் நாட்டையே புரட்டிப்போட்டன.

உத்தர பிரதேசத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்தவர்கள் குப்தா சகோதரர்கள். அஜய், அதுல் மற்றும் ராஜேஷ் எனப்படும் இந்த 3 சகோதரர்களும் பிழைப்பு தேடி தொண்ணூறுகளின் மத்தியில் தென்னாப்பிரிக்கா சென்றனர். அங்கே வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடியவர்களுக்கு, அப்போது எழுச்சி கொண்டிருந்த கணினி புரட்சி உயிர் கொடுத்தது. ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கியவர்கள், அரசு நிர்வாகத்தைக் கணினிமயப்படுத்தும் நடவடிக்கைகளில் உதவுவதாக ஆட்சியாளர்களுக்கு அணுக்கமானார்கள். அப்படித்தான், கட்சியிலும் ஆட்சியிலும் அப்போது வளர்ந்து வந்த ஜேக்கப் ஜூமா என்பவரை நெருங்கினார்கள். அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபரானபோது, குப்தா சகோதரர்கள் நிழல் ஆட்சியாளர்களாக மாறிப்போனார்கள்.

ஜேக்கப் ஜூமா
ஜேக்கப் ஜூமாThe Hindu

அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதில் ஜேக்கப் ஜூமாவுக்கு ஆகமுடிந்த உதவிகளை குப்தா சகோதரர்கள் செய்தார்கள். பிரதி உபகாரமாக தென்னாப்பிரிக்காவின் வளம் கொழித்த சுரங்கத் தொழில்கள் அவர்களுக்குக் கிட்டின. ஊழல்களை மறைக்கவும், ஜூமாவின் புகழ் பாடவும் பல்வேறு ஊடக நிறுவனங்களை அவர்கள் கைப்பற்றினார்கள். ஜூமா - குப்தா ஊழல் பரிவர்த்தனைக்கு தோதாத குப்தாக்கள் கைகாட்டும் நபர்கள் அரசின் முக்கியத் துறைகளில் அமர்த்தப்பட்டனர். ஜூமாவின் வாரிசுகள் மற்றும் ஆசை நாயகிகளுக்கு குப்தா நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த ஜூமா - குப்தா கைகோர்த்த தேசத்தின் இருண்ட காலத்தை, ’ஜூப்தா’ சாம்ராஜ்ஜியம் என தென்னாப்பிரிக்கர்கள் வர்ணிக்கின்றனர். அந்தளவுக்கு அரசு சொத்துக்களை குப்தா நிறுவனங்களின் உடைமையாக்கி நாட்டின் கஜானாவே கொள்ளை போனது. ஜூமாவுக்கு என்று தனியாக மாட மாளிகையை உருவாக்கி அதில் சதா சல்லாபித்திருக்க ஏற்பாடு செய்தனர். அரசின் முடிவுகளில் தலையிடுவது, அமைச்சர்கள் உயரதிகாரிகளின் நியமனத்தைத் தீர்மானிப்பது, அரசு ஒப்பந்தப் பணிகளை ஒட்டுமொத்தமாக வளைப்பது என குப்தா பிரதர்ஸ் ஆடித்தீர்த்தனர்.

தென்னாப்பிரிக்கர்களின் ’ஜூப்தா’ எதிர்ப்பு போராட்டம்
தென்னாப்பிரிக்கர்களின் ’ஜூப்தா’ எதிர்ப்பு போராட்டம்

ஜூமாவின் சல்லாப வெறியே ஜூப்தா சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவுரை எழுதியது. ஊழல் புகார்கள் மட்டுமன்றி பாலியல் வழக்குகளிலும் சிக்கியது அவரது மக்கள் ஆதரவைச் சரித்தது. சுதாரித்த குப்தா சகோதரர்கள் தங்கள் சொத்துக்களை அக்கரைகளில் குவிக்க ஆரம்பித்தனர். தென்னாப்பிரிக்கர்களின் அதிருப்தி உச்சமடைந்தபோது குப்தாக்கள் வளைகுடா நாடுகளில் அடைக்கலம் அடைந்தனர். புதிய ஆட்சியாளர்களுக்கு மக்களின் சீற்றத்தைத் தணிப்பது கட்டாயமானது.

தென்னாப்பிரிக்காவில் மிச்சமிருந்த குப்தாக்களின் சொத்துக்களை முடக்கியவர்கள், ராஜீய நடவடிக்கைகளின் மூலம் அவர்களைக் கைது செய்ய முயன்றனர். தென்னாப்பிரிக்காவின் ஊழல் வழக்குகளை முழுமையாக விசாரிக்கவும், தவறிழைத்த அதிகார வர்க்கத்தினரை தண்டிக்கவும், முறைகேடான சொத்துக்களின் வெளிநாட்டு ஆதாரங்களைத் திரட்டவும் தென்னாப்பிரிக்க நீதிமன்றங்களுக்கு குப்தா சகோதரர்கள் அவசியமானார்கள்.

தென்னாப்பிரிக்காவின் நடப்பு அதிகார மையத்துடன், தங்களது இந்திய தனவந்தர்களின் லாபியைக் கொண்டு குப்தா சகோதரர்கள் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்தச் சூழலில், இன்டர்போல் விடுத்திருந்த ரெட் நோட்டீஸ் நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கியிருந்த குப்தா சகோதரர்கள் வளைக்கப்பட்டனர். மூவரில் ராஜேஷ் மற்றும் அதுல் கைது செய்யப்பட்டிருப்பதை இன்று(ஜீன் 7) தென்னாப்பிரிக்கா உறுதி செய்துள்ளது. அஜய் குறித்த தகவலில் மர்மம் நீடிக்கிறது.

சுயநல கார்ப்பரேட்டுகளின் வலையில் சிக்கும் ஆட்சியாளர்கள், அவற்றைக் கண்டுகொள்ளாது தாமதமாக சுரணை பெறும் பொதுமக்கள் ஆகியவற்றின் அவலப்போக்கிற்கு தென்னாப்பிரிக்காவின் ’ஜூப்தா சகாப்தம்’ உலக உதாரணமாகி இருக்கிறது.

குப்தா சகோதரர்கள்
கலவர பூமியான தென்னாப்பிரிக்கா!- இந்தியர்களுக்குக் குழிபறித்த குப்தா சகோதரர்கள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in