டெஸ்மண்ட் டூட்டுவுக்குப் பிரியாவிடை கொடுக்கும் தென்னாப்பிரிக்கா

டெஸ்மண்ட் டூட்டுவுக்குப் பிரியாவிடை கொடுக்கும் தென்னாப்பிரிக்கா

நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரும், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர உழைத்தவருமான டெஸ்மாண்ட் டூட்டு (90), கடந்த டிச.26-ல் மறைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் இன்று, தலைநகர் கேப்டவுனில் உள்ள புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயத்தில் நடந்துவருகின்றன.

நிறவெறிக்கு எதிராகப் போராடியதற்காக 1984-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், தென்னாப்பிரிக்காவின் ஆன்மிக ஆளுமையாக விளங்கியவருமான டெஸ்மண்ட் டூட்டு, அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் முதல், சாமானியர்கள் வரை அனைவராலும் நேசிக்கப்பட்டவர். நிறவெறிக்கு எதிராகப் போராடிய கடைசித் தலைவர்களில் ஒருவர்.

கறுப்பின மக்கள் மீது வெள்ளையினத்தவர் நிகழ்த்திய குற்றங்கள் குறித்து விசாரிக்க நெல்சன் மண்டேலா அமைத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் தலைவராக இருந்தவர். அதேவேளையில், வெள்ளையினத்தவர் உட்பட அனைத்துச் சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர். நெல்சன் மண்டேலாவைப் போலவே காந்தியச் சிந்தனை கொண்டவர். 2005-ல் அவருக்கு காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், அன்னை தெரசா, தலாய் லாமா போன்ற ஆளுமைகள் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பே காசநோய் பாதிப்புள்ளாகியிருந்தார் டெஸ்மண்ட் டூட்டு. புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கலுக்குள்ளான அவருக்கு 1997-ல் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொதுநிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பங்கேற்கவில்லை. டிச.26-ல் அவர் காலமானபோது தென்னாப்பிரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது.

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கு இன்று நண்பகலில் தொடங்கியது. அரசு மரியாதையுடன் நடக்கும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோஸா, டெஸ்மண்ட் டூட்டு மிகச் சிறந்த தார்மிக ஆளுமைகளுக்கான உதாரணமாக விளங்கியவர் எனக் குறிப்பிட்டார்.

காந்தியத்தின் மீது தாக்கம் கொண்ட டெஸ்மண்ட் டூட்டு, எளிமையை விரும்பியவர். தனது இறுதிச் சடங்கு, மிக எளிமையான முறையில் நடைபெற வேண்டும் எனக் கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தார். மலிவான சவப்பெட்டியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மலரஞ்சலி போன்றவற்றுக்குச் செலவு செய்வதைவிடவும் அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்த வேண்டும் என்றும் அவர் முன்பே வேண்டுகோள் விடுத்திருந்தார். சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் திகழ்ந்த அவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். அவரது விருப்பத்தின்படியே எளிமையான முறையில் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோஸா, டெஸ்மண்ட் டூட்டு மிகச் சிறந்த தார்மிக ஆளுமைகளுக்கான உதாரணமாக விளங்கியவர் எனக் குறிப்பிட்டார்.

டெஸ்மண்ட் டூட்டுவின் மனைவிக்கு, ஆறு வண்ணங்கள் கொண்ட தென்னாப்பிரிக்க தேசியக் கொடியை வழங்கினார் அதிபர் சிறில் ராமபோஸா. அந்தக் கொடியின் அடிப்படையில்தான், ‘வானவில் தேசம்’ எனும் பதத்தை டெஸ்மண்ட் டூட்டு உருவாக்கினார். அனைவரும் இணைந்து வாழ வேண்டும் எனும் நோக்கில் அந்தப் பதத்தை அவர் உருவாக்கினார்.

டெஸ்மண்ட் டூட்டுவின் நீண்டநாள் தோழரும், ஓய்வுபெற்ற பிஷப்புமான மைக்கேல் நட்டால், இறுதி நிகழ்ச்சிக்கான பிரசங்கத்தை நிகழ்த்துகிறார். டெஸ்மண்ட் டூட்டு கேப் டவுனின் ஆர்ச் பிஷப்பாக இருந்தபோது, அங்கு ஆங்கிலிகன் டீனாக இருந்தவர் மைக்கேல் நட்டால்.

தலாய் லாமாவுடன் டெஸ்மண்ட் டூட்டு
தலாய் லாமாவுடன் டெஸ்மண்ட் டூட்டு

டெஸ்மண்ட் டூட்டுவின் பெரும் மதிப்புக்குரிய நண்பரான தலாய் லாமாவால், தன் நீண்டகால நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது வயதும், இன்றைய பெருந்தொற்றுச் சூழலும் அந்த வாய்ப்பை அவரிடமிருந்து பறித்துவிட்டன.

தன் நெருங்கிய சகாவும் நிறவெறி எதிர்ப்புப் போராளியுமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் டெஸ்மண்ட் டூட்டுவும் கலந்துகொள்ளவில்லை. அந்நிகழ்வில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, அப்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமாவின் அரசை அவர் விமர்சித்திருந்தார். அவருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட்டது என அரசுத் தரப்பு விளக்கம் அளித்தாலும், டெஸ்மண்ட் டூட்டு சமாதானமாகவில்லை.

உணர்ச்சிவயமான மனிதராகத் திகழ்ந்த அவர், சோகம், சந்தோஷம், நகைச்சுவை உணர்வு என எதையும் பொதுவில் வெளிப்படுத்தத் தயங்காதவராக இருந்தார்.

கேப்டவுனில் மழை பெய்துவரும் நிலையிலும் ஏராளமான பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

டெஸ்மண்ட் டூட்டுவுக்குப் பிரியாவிடை கொடுக்கும் தென்னாப்பிரிக்கா
டெஸ்மண்ட் டூட்டு: தென்னாப்பிரிக்க காந்தியர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in