சோமாலியாவை உருக்குலைக்கும் மழை வெள்ளம் - 31 பேர் பலி; 5 லட்சம் பேர் பாதிப்பு!

வறட்சி நாடான சோமாலியாவில் கடும் மழை வெள்ளம்
வறட்சி நாடான சோமாலியாவில் கடும் மழை வெள்ளம்

சோமாலியாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா உலகின் மிகவும் வறட்சியான மற்றும் ஏழை நாடுகளில் ஒன்றாகும். வறட்சி காரணமாக உணவுப் பொருட்கள் கிடைக்காமல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சோமாலியாவில் மழை பெய்ய துவங்கியது. இடைவிடாமல் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தாவூத் ஆவிஸ் தெரிவித்துள்ளார்.

31 பேர் உயிரிழப்பு - 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
31 பேர் உயிரிழப்பு - 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பல்வேறு வகையிலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோமாலியாவின் கெட்டோ பகுதியில் மழை வெள்ள பாதிப்பு மிகவும் அதிக அளவில் உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐநா அலுவலகம், மழை வெள்ளத்தை சமாளிக்க முடியுமே தவிர தடுக்க முடியாது என கூறியுள்ளது. வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக சோமாலியாவுக்கு இந்திய மதிப்பில் 208 கோடி ரூபாயை ஐநா வழங்கியுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை வெள்ளம்
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை வெள்ளம்

சோமாலியாவுக்கு அருகே உள்ள கென்யாவும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தை சேமித்து வைக்க போதிய அணைகள் இல்லாததும், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததுமே இந்த மழை பாதிப்புகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in