6.9 ரிக்டரில் அதிரவைத்த நிலநடுக்கம்: தவித்து நிற்கும் தைவான்!

6.9 ரிக்டரில் அதிரவைத்த நிலநடுக்கம்: தவித்து நிற்கும் தைவான்!

தைவான் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பான் சுனாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இன்று மதியம் 2.44 மணிக்கு, தாய்துங் நகரிலிருந்து வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆரம்பத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதியாக அது 6.9 ரிக்டர் என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

யுலி நகரில் ஒரே ஒரு கட்டிடம் இடிந்துவிழுந்ததாக தைவானின் மத்திய செய்தி முகமை தெரிவித்திருக்கிறது. கட்டிடங்கள் குலுங்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ஏராளமாகப் பகிரப்பட்டன.

நேற்றும் (செப்.17) தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.6 ரிக்டராகப் பதிவாகியிருக்கிறது. எனினும், இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் கடுமையானது என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் உணரப்பட்டிருக்கின்றன. மேலும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்திருக்கின்றன. எனினும், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. தலைநகர் தைபேயிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும், தைவான் அருகே உள்ள தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஃபுஜியான், குவாண்டாங், ஜியாங்சு, ஷாங்காய் போன்ற கடற்கரையோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சீனா நிலநடுக்க வலைப்பின்னல் மையம் தெரிவித்திருக்கிறது.

1999-ல் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தைவானில் பெரும் சேதத்தை விளைவித்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் பிறகு அந்நாடு சந்தித்திருக்கும் மிக மோசமான நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பசிபிக் நெருப்பு வளையம்’ என அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கும் நாடுகளில் தைவானும் ஒன்று. பசிபிக் பெருங்கடலின் படுகையில் காலணியின் அடிப்பாகத்தின் வடிவில் அமைந்திருக்கும் இந்த நிலப்பரப்பு, 40,000 கிலோமீட்டர் தூரம் விரிந்திருக்கிறது. நெருப்பு வளையத்தில், பூமிக்கு அடியில் ஏற்படும் டெக்டோனிக் தட்டுகள் நகர்வுகள், உலகின் 90 சதவீத நிலநடுக்கங்களுக்குக் காரணமாகின்றன. இங்குதான், உலகின் 75 சதவீத எரிமலைகளும் அமைந்திருக்கின்றன.

யூரேஷிய, வட அமெரிக்க டெக்டோனிக் தட்டுகளுடன், ஜுவான் டி ஃபுகா, கோகோஸ், கரீபியன், நாஸ்கா, அன்டார்டிக் தட்டுகள் மற்றும் இந்திய, ஆஸ்திரேலிய, பிலிப்பைன்ஸ் தட்டுகள் போன்றவை இந்தப் பகுதியில் பூமிக்கடியில் இருக்கின்றன. இவற்றின் நகர்வுகள், மோதல்கள், ஒன்றின் மீது ஒன்று உராய்வது, ஒன்றின் கீழாகவோ அல்லது மேலாகவோ வேறொன்று செல்வது போன்றவற்றால் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in