பதவி விலகினார் அமைச்சர் ஈஸ்வரன்... ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை!

அமைச்சர் ஈஸ்வரன்
அமைச்சர் ஈஸ்வரன்

ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கெடுத்து வரும் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான ஈஸ்வரன், அமைச்சரவையில் சேரும் வாய்ப்பினை 2006-ல்  பெற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் அவர் பங்காற்றி இருக்கிறார். 2021 அமைச்சரவையில் அவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. பின்னர் அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பொறுப்புகளையும் கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூா் எஃப் 1 காா் பந்தய விவகாரத்தில் தொழிலதிபா் ஓங் பெங் செங்கிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலா் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஊழல் விசாரணைக்கான சிறப்பு அமைப்பு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுக்காக அவரை கைது செய்தது.  அவருடன் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய தொழிலதிபர் ஓங் பெங் செங் என்பவரும்   கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  இருவரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில், அவர்களின் பாஸ்போர்ட் ஆவணங்கள் அரசால் முடக்கப்பட்டன. ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து வருவதால் அது குறித்த விவரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என, ஊழல் விவகாரங்களை புலனாய்வு செய்யும் சிபிஐபி அமைப்பின் விசாரணை அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். ஆனால் அதன்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அமைச்சர் ஈஸ்வரன் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். 

இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  நேற்று தனது பதவியை  அவர் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவா் கூறுகையில், 'நான் குற்றமற்றவன். என் பெயருக்கு விளைவிக்கப்பட்டுள்ள களங்கத்தைப் போக்குவதில் இனி கவனம் செலுத்துவேன்' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in