‘உக்ரைன் போரின் மிகக் கடினமான தருணம் இதுதான்!’ - அதிபர் ஸெலன்ஸ்கி வேதனை

‘உக்ரைன் போரின் மிகக் கடினமான தருணம் இதுதான்!’ - அதிபர் ஸெலன்ஸ்கி வேதனை

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான சியாவெராடோனெட்ஸ்க்கைக் கைப்பற்றுவதிலும் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் தொழிற்சாலைகள் நிறைந்த டோன்பாஸ் பிராந்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர ரஷ்யா முயற்சிக்கிறது. இந்நிலையில், சியாவெராடோனெட்ஸ்க் முற்றுகை குறித்துப் பேசியிருக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, போரின் மிகக் கடினமான தருணம் இதுதான் என வேதனை தெரிவித்திருக்கிறார்.

நேற்று இரவு உக்ரைன் மக்களிடம் தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய அதிபர் ஸெலன்ஸ்கி, “டோன்பாஸ் பிராந்தியத்தில் நடந்துவரும் யுத்தத்தின் மையப் புள்ளியாக இருப்பது சியாவெராடோனெட்ஸ்க் நகரம்தான்” என்று கூறினார், அதேவேளையில், எதிரிப் படைகளுக்குக் கடும் சேதத்தை உக்ரைன் படைகள் ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

டோன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள லுஹான்ஸ்க்கின் ஆளுநர் ஹைடாய், “சியாவெராடோனெட்ஸ்க் நகரத்தின் புறநகர்ப் பகுதிகள் மட்டும்தான் எங்கள் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரில் வசிக்கும் மக்களைக் காப்பாற்றுவது சாத்தியமற்றது” என்று கூறியிருக்கிறார்.

அந்நகரில் நடந்துவரும் கடும் மோதல் குறித்து வெளியான தகவல்களை உறுதிசெய்த ஸெலன்ஸ்கி, சியாவெராடோனெட்ஸ்க்கில் நடக்கும் யுத்தம்தான், இந்தப் போரின் மிகக் கடினமான ஒன்று எனக் குறிப்பிட்டார். டோன்பாஸின் தலையெழுத்து அங்குதான் தீர்மானிக்கப்படவிருக்கிறது என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னர் சியாவெராடோனெட்ஸ்க் நகரிலும் அதன் அருகில் உள்ள லிஸிசான்ஸ்க் நகரிலும் சேர்த்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவந்தனர். தற்போது அங்கு மொத்தம் 15,000 பேர்தான் எஞ்சியிருக்கின்றனர். பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஏராளமானோர் அகதிகளாகியிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் மூலம் தங்கள் பகுதியில் அமைதி திரும்பும் என்று காத்திருந்த மக்கள் பெரும் இழப்பைத்தான் சந்தித்திருக்கின்றனர்.

டோன்பாஸ் பிராந்தியத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி பேசும் மக்கள்தான். எனவே, அங்குள்ள பல அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் ரஷ்ய ஆதரவு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். எனினும், பொதுமக்களிடையே ரஷ்யாவுக்கு அதிக ஆதரவு இல்லை என்று அங்கு நடத்தப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்புகள் சொல்கின்றன.

இந்தப் போரைத் தொடங்குவதற்கு முன்னர் டோன்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளைத் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய அதிபர் புதின். எனினும், இந்தப் போரில் முழுமையாக அந்தப் பிராந்தியத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிடாத வகையில் உக்ரைன் படையினர் எதிர்த்தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in