`சுட்டுத் தள்ளுங்கள்'- முப்படைகளுக்கு அதிபர் கோத்தபய அதிர்ச்சி உத்தரவு

`சுட்டுத் தள்ளுங்கள்'- முப்படைகளுக்கு அதிபர் கோத்தபய அதிர்ச்சி உத்தரவு

அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இலங்கை அதிபர் கோத்தபய.

இலங்கையில் இரண்டு நாளாக அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று காலை, போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது இரண்டு மாத இலங்கை போராட்டத்தில் திருப்புமுனையாக மாறியுள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள், அவர்களின் உடைமை மீது கடுமையான தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதன் காரணமாக தலைநகர் கொழும்பு வன்முறை களமாக காட்சி அளித்தது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னரும் போராட்டம் ஓயாமல் ஆளும் கட்சியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகள், கார்கள் சூறையாடப்பட்ட நிலையில், இந்த தாக்குதலில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்தார். இதன் உச்சமாக ராஜபக்சவின் வீடு நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டன. பயத்தில் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறிய ராஜபக்ச, தனது குடும்பத்தினருடன் தப்பித்து தமிழர்கள் அதிகம் வாழும் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளத்தில் ஒளிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து திரிகோண மலையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம், காவல்துறைக்கு அரசு முழு அதிகாரம் வழங்கியுள்ளது.

போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தினால் அவர்களை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சம் அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்துள்ளது. காவல் துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினால் பல உயிரிழப்புகளை அந்நாடு சந்திக்க வாய்ப்பிருப்பதாக ஒரு பக்கம் எச்சரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.