ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 10 பேர் பலி... பயிற்சியின் போது விபரீதம்!

மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியின் போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 10 பேர் பலி
மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியின் போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 10 பேர் பலி

மலேசியாவில் கடற்படை தின ஒத்திகையின் போது 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவில் வரும் ஏப்ரல் 27ம் தேதி 90 வது கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஆகியவை அடங்கிய கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக கடற்படை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக இன்று ஹெலிகாப்டர் சாகச பயிற்சி ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இருந்தன. 7 பேருடன் ஹச்.ஓ.எம் ரக ஹெலிகாப்டர் ஒன்றும், மூன்று பேருடன் ஃபென்னக் ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த சேதம் அடைந்து தரையில் விழுந்து நொறுங்கிய இந்த இரண்டு ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் உயிரிழந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள கடற்படை மற்றும் மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகை பயிற்சியைப் பார்க்க கடற்படை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பார்வையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தனர். நல்வாய்ப்பாக இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஜப்பானில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் பயிற்சியின் போது 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தகது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in