
எதிரி தேசங்களை உளவு பார்ப்பதற்காக வட கொரியா திட்டமிட்டிருந்த உளவு செயற்கைக்கோளை ஏவும் பணி, இரண்டாவது முறையாக இன்று(ஆக.24) தோல்வியை தழுவியது.
அதிபர் கிம் ஜாங் - உன் தலைமையிலான வட கொரியாவில், மக்களின் வாழ்க்கைத் தரம் அதலபாளத்தில் விழுந்து வருகிறது. ஆனபோதும், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட தனது பரம எதிரிகளுக்கு எதிராக, படைக்கலன்களை பெருக்குவது மற்றும் அச்சுறுத்தல் ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வது ஆகியவற்றில் வட கொரியா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
இந்த வரிசையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை விண்ணிலிருந்து கண்காணிக்கவும் தனது எதிர்கால போர்த் தாக்குதல்களை வழிநடத்தவும், உளவு செயற்கைக்கோளை ஏவ முடிவு செய்தது. அதன்படி மே மாதம் உளவு செயற்கைக்கோளை கட்டமைத்து விண்ணுக்கு ஏவியது. ஆனால் செயற்கைக்கோள் தாங்கிய ராக்கெட், அதன் செயல்பாட்டில் பிசகியதில் ஆரம்ப கட்டத்திலேயே கடலில் வீழ்ந்து மூழ்கியது.
பின்னர் இரண்டாம் முறையாக உளவு செயற்கைக்கோள் ஏவலை தொடங்கியது. வட கொரியாவின் விண்வெளித் திட்டத்தை மோப்பம் பிடித்த தென் கொரியா அது குறித்து உலகுக்கு அறிவித்தது. ‘நீண்ட தூரம் செல்லும் ராக்கெட்டை வட கொரியா ஏவியதாக’ தென் கொரிய ராணுவம் முரசறைந்தது. இதனையடுத்து நெருக்கடிக்கு ஆளான வட கொரியா, தனது இரண்டாவது இன்னிங்ஸ் உளவு செயற்கைக்கோள் முயற்சியும் தோல்வியில் முடிந்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் உளவு செயற்கைக்கோள் ஏவலில் ஏற்பட்ட தோல்வியை ஆராய்ந்த பின்னர், அவற்றை நிவர்த்தி செய்யும் விதமான மூன்றாவது செயற்கைக்கோள் ஏவலுக்கான பணிகளை எதிர்வரும் அக்டோபரில் தொடங்க இருப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.