ட்விட்டரைப் பயன்படுத்திய ‘குற்றம்’: 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்

அரசு எதிர்ப்பாளர்களின் ட்வீட்களை ரீட்வீட் செய்ததாக சவுதி அரசு நடவடிக்கை
சல்மா அல்-ஷெஹாப்
சல்மா அல்-ஷெஹாப்

சவுதி அரேபியாவைச் சேர்ந்த சல்மா அல்-ஷெஹாப், பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. ரியாதில் உள்ள இளவரசி நோரா பிண்ட் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், பல் மருத்துவத் துறையில் ஈடுபட்டிருப்பவர், மருத்துவக் கல்வியாளர் என அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரப் பக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணமானவர். 4 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சல்மாவுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது சவுதி அரசு. அரசு எதிர்ப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகளை பின்தொடர்ந்தது, அவர்களது ட்வீட்களை ரீட்வீட் செய்ததுதான் அவர் செய்த குற்றம். அரசு எதிர்ப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகளைப் பின்தொடர்ந்ததன் மூலம் பொது அமைதியையும், சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பையும் சீர்குலைக்க முயல்பவர்களுக்கு அவர் உதவியதாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. பிரிட்டனிலிருந்து விடுமுறைக்காக சவுதி திரும்பியபோது அவர் செய்த இந்தச் செயல்களுக்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேசமயம், சல்மா எந்த வகையிலும் அரசியல் செயற்பாட்டாளராக இருந்ததில்லை. அவரது ட்விட்டர் பக்கத்தில்கூட அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படங்கள்தான் அதிகம் பகிரப்பட்டிருக்கின்றன. அதேசமயம், சவுதி சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசு எதிர்ப்பாளர்கள் (சவுதியைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்கள்) வெளியிட்ட ட்வீட்களை அவர் ரீட்வீட் செய்திருக்கிறார்.

2020 டிசம்பரில் சவுதி திரும்பியவர், தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிட்டனுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் அந்த ட்வீட்களை அவர் ரீட்வீட் செய்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்களில் சவுதியைச் சேர்ந்த செல்வந்தரும் இளவரசருமான அல்வலீத் பின் தலாலும் ஒருவர். இந்தச் சூழலில், சல்மாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை குறித்து கருத்து தெரிவிக்க ட்விட்டர் மறுத்துவிட்டதாக ‘தி கார்டியன்’ நாளிதழ் கூறுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார். அப்போது ஜெட்டா நகரில் நடந்த சந்திப்பின்போது சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பைடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2018-ல் நடந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டவர் முகமது பின் சல்மான். கஷோகியைக் கொலை செய்ய ஒப்புதல் அளித்தவர் முகமது பின் சல்மான் தான் என அமெரிக்க உளவுத் துறை வட்டாரங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன. இந்நிலையில், பைடனின் சவுதி பயணத்துக்குப் பின்னர் சவுதி அரேபியாவில் உள்ள ‘பயங்கரவாதத்துக்கு எதிரான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்’ இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறது.

சல்மாவுக்கு 34 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவுதி அமைப்பு கண்டித்திருக்கிறது. எந்தச் செயற்பாட்டாளருக்கும் எதிராக இவ்வளவு நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. பெண் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நியாயமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவதாகவும், சிறையில் பெண்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் சவுதியைச் சேர்ந்த காலித் அலிஜாப்ரி (இவர் தற்போது வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார்), சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராகப் பேசுவது பயங்கரவாதத்துக்கு இணையான குற்றமாகக் கருதப்படுவதற்கு சல்மாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை ஓர் உதாரணம் என்று தெரிவித்திருக்கிறார். காலித்தின் சகோதரரும் சகோதரியும் சவுதி அரேபியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்விஷயத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in