அமெரிக்காவில் பத்மபூஷன் விருதினைப் பெற்றுக்கொண்டார் சத்யா நாதெள்ளா: இந்திய மக்களுக்கு நன்றி!

அமெரிக்காவில் பத்மபூஷன் விருதினைப் பெற்றுக்கொண்டார் சத்யா நாதெள்ளா: இந்திய மக்களுக்கு நன்றி!

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதினை அமெரிக்காவில் பெற்றுக்கொண்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளாவுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக தூதர் டாக்டர் டி.வி. நாகேந்திர பிரசாத்திடம் இருந்து, சிறப்பான சேவைக்கான பத்ம பூஷன் விருதை முறைப்படி சத்யா நாதெள்ளா பெற்றார். அவர் அடுத்த ஜனவரியில் இந்தியாவிற்கு வருகைதரவுள்ளார்.

விருதை பெற்றுக்கொண்ட சத்யா நாதெள்ளா, “பத்ம பூஷன் விருதை பெறுவதும், பல அசாதாரண மனிதர்களுடன் அங்கீகாரம் பெற்றதும் பெருமையாக உள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் பல சாதனைகளை அடைய இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​இந்தியாவில் உள்ளடங்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கு குறித்து இந்திய தூதர் பிரசாத் உடன் நாதெள்ளா விவாதித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய நாதெள்ளா, "நாம் ஒரு வரலாற்றுப் பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தின் காலகட்டத்தில் வாழ்கிறோம். அடுத்த பத்தாண்டுகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வரையறுக்கப்படும். இந்தியத் தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு அளவிலும் தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றன, இவை குறைந்த அளவில் அதிகம் செய்ய உதவுகின்றன. இது இறுதியில் அதிக கண்டுபிடிப்பு, சுறுசுறுப்பு மற்றும் மீளும் தன்மைக்கு வழிவகுக்கும்" என்று கூறினார்.

ஹைதராபாத்தில் பிறந்த நாதெள்ளா பிப்ரவரி 2014ல் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஜூன் 2021 ல் அவர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். அதன்படி இந்த ஆண்டு நாதெள்ளாவுக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in