பொருளாதாரத் தடையும் போர் நடவடிக்கைதான்: புதின் ஆவேசம்

பொருளாதாரத் தடையும் போர் நடவடிக்கைதான்: புதின் ஆவேசம்

பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேற்கத்திய நாடுகள் முடக்குவதாகவும், இது போர் நடவடிக்கைக்கு இணையானது என்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆவேசத்துடன் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும் ‘நோ ஃப்ளை ஸோன்’ அமல்படுத்துவது தொடர்பாக, மூன்றாவது நாடு தலையிட்டால், அதுவும் போரில் பங்கெடுப்பதாகக் கருதப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ‘நோ ஃப்ளை ஸோன்’ அறிவிக்குமாறு உக்ரைன் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பா மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் பேரழிவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் ரஷ்யா ஐரோப்பா முழுவதும் விரிவான அளவில் போரைத் தொடங்கிவிடும் எனும் காரணத்தை சொல்லி உக்ரைனின் வேண்டுகோளை நேட்டோ மறுதலித்துவிட்டது. இதனால் ஏமாற்றமடைந்த உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, இனி ஏற்படப்போகும் உயிரிழப்புகளுக்கு நேட்டோ தான் காரணம் என்று சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

14 லட்சம் அகதிகள்

பிப்ரவரி 24 முதல் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில், உக்ரைன் பொதுமக்களில் 351 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றே ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்தப் போரின்போது தங்கள் தரப்பில் 498 பேர் கொல்லப்பட்டதாக மார்ச் 2-ல் தெரிவித்த ரஷ்யா, அதன் பின்னர் ரஷ்ய ராணுவத்தினரில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் எனும் தகவலைச் சொல்லவில்லை.

இதுவரை 14 லட்சம் பேர் அகதிகளாகியிருக்கிறார்கள். போரில் சிக்கியிருக்கும் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். உக்ரைனில் மிகப் பெரிய அளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா உலக உணவுத் திட்டம் எச்சரித்திருக்கிறது. உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, அவசரகால நிதியாக அமெரிக்காவிடம் 10 பில்லியன் டாலர் கோரியிருப்பதாகத் தெரிகிறது.

தடைபட்ட வெளியேற்றம்

மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகள், பெண்கள் வெளியேற வழியேற்படுத்தித் தர வேண்டும் என ரஷ்யாவிடம் உக்ரைன் கோரியிருந்த நிலையில், மரியுபோல் மற்றும் அதன் அருகில் வோல்னோவாகா நகரங்களில் ரஷ்யா சண்டை நிறுத்தம் அறிவித்தது. மரியுபோல் நகரிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்ததால் அந்தப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

மரியுபோல் நகருக்கு வெளியே பேருந்துகள் மூலம் வெளியேற மக்கள் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்துசெய்யப்பட்டதாக மேயர் வாடிம் போய்சென்கோ கூறியிருக்கிறார். ஆனால், பொதுமக்கள் வெளியேறுவது தொடர்பான ஏற்பாடுகளில் ஏற்படும் தடங்கல்களுக்கு உக்ரைன் தான் காரணம் என்றும் புதின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

வோல்னோவாகா மற்றும் மரியுபோல் நகரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக அங்குள்ள மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்றுவதன் மூலம் கருங்கடல் மற்றும் அசோவ் கடல் வழியாக எந்தவிதமான கடல்வழிப் போக்குவரத்தும் நடைபெறாமல் தடுப்பது ரஷ்யாவின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

பொருளாதாரத் தடை

இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதாகவும், இது போர் நடவடிக்கைக்கு இணையானது என்றும் புதின் எச்சரித்திருக்கிறார். குறிப்பாக, இவ்விஷயத்தில் பிரிட்டன் மீது ரஷ்யா கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையின் விளைவாக ரஷ்யாவிடம் இருந்த 600 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பில் 60 சதவீதம் முடக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் ரஷ்யக் கரன்ஸியான ரூபிளின் மதிப்பைக் கணிசமாகச் சரியச் செய்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in