போரின் பொல்லா விளைவு: மன அழுத்தத்துக்கு மாத்திரை வாங்கிக் குவிக்கும் ரஷ்யர்கள்

போரின் பொல்லா விளைவு: மன அழுத்தத்துக்கு மாத்திரை வாங்கிக் குவிக்கும் ரஷ்யர்கள்

போரை நாம் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், போர் நம்மை முடித்துவிடும் என்பார்கள். போர் என்பது இரு புறமும் கூரான கத்திக்கு நிகரானது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரும் இதில் விதிவிலக்கல்ல. ஒருபக்கம் ஏராளமான உக்ரைனியர்கள் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து தத்தளிக்கும் நிலையில், ரஷ்யாவிலும் பலர் நிம்மதி இழந்து தவித்துவருகின்றனர்.

ஆம், போரின் விளைவாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் ரஷ்யர்கள் பலர் அதிலிருந்து விடுபட, ‘ஆன்டி-டிப்ரெஸ்ஸன்ட்ஸ்’ வகை மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி உட்கொள்வது தெரியவந்திருக்கிறது.

2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் வாங்கியதைவிட 70 சதவீதம் அதிகமாக இந்த மாத்திரைகளை ரஷ்யர்கள் வாங்கியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களில் இந்தப் போக்கு அதிகம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போரின் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பெருமளவில் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. எனினும், அதையெல்லாம் சமாளித்து வேலையில்லாத் திண்டாட்டத்தையும், விலை உயர்வையும் புதின் அரசு சமாளித்துவருவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், பல நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி வேலை இழந்தவர்களில் பலர் மன அழுத்தத்திலிருந்து விடுபட ‘ஆன்டி-டிப்ரெஸ்ஸன்ட்ஸ்’ மருந்துகளை நாடுகின்றனர்.

பொதுவாகவே, உக்ரைன் மீதான போரைப் பெரும்பாலான ரஷ்யர்கள் மனதளவில் ஏற்கவில்லை. போரைக் கண்டித்து புதின் அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களும் நடந்தன. இந்நிலையில், இப்படி ஒரு நிலைமையை எதிர்கொண்டிருக்கிறார்கள் ரஷ்யர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in