20 சதவீதம் அதிகரித்த மருந்து விலை: ரஷ்யர்களுக்குப் புதிய சிக்கல்

20 சதவீதம் அதிகரித்த மருந்து விலை: ரஷ்யர்களுக்குப் புதிய சிக்கல்

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலின் பாதிப்பு, உக்ரைனில் மட்டுமல்லாமல் ரஷ்யாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும், ஐநா, நேட்டோ போன்ற அமைப்புகளும் விதித்திருக்கும் பொருளாதாரத் தடையின் நேரடி விளைவுகள் ரஷ்யக் குடிமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ரஷ்ய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் ஒருபுறம், வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறிவருவது இன்னொரு புறம் என அடுத்தடுத்து உருவாகிவரும் நெருக்கடிகள் காரணமாக, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனும் அச்சம் ரஷ்யர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, சர்க்கரை, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் பதுக்கிவருகின்றனர்.

அவற்றுடன் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளுக்காக மருந்துக் கடைகள் முன்னர் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

ரஷ்யாவில் மருந்து வணிகத்தை நிறுத்திக்கொள்வதாக, பெரும்பாலான சர்வதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள், அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வணிகத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த லில்லி போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் விற்பனை அளவைக் குறைத்துக்கொண்டதுடன், புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்களுக்கான மருந்துகளையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் ரஷ்யாவுக்கு அனுப்புகின்றன. அத்தியாவசியமற்ற மருந்துகளை ரஷ்யாவுக்கு அனுப்புவதை அந்நிறுவனங்கள் ஏறத்தாழ நிறுத்திவைத்திருக்கின்றன.

சுவிட்சலாந்தின் நோவார்டிஸ், பிரான்ஸின் சனோஃபி போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் மருந்து வணிகத்தைக் குறைத்திருக்கின்றன. இதுபோன்ற காரணிகளால் ரஷ்யாவில் மருந்துகளின் விலை 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in