புதின் ஒரு கொலைகாரர்... உக்ரைனியர்கள் எங்கள் உறவினர்கள்!

போருக்கு எதிராகப் போராடும் ரஷ்யர்கள்
புதின் ஒரு கொலைகாரர்... உக்ரைனியர்கள் எங்கள் உறவினர்கள்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராக ரஷ்யாவிலிருந்தே குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. 2021 நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில், அதிநவீன ஆயுதங்களுடனும், ரத்தவங்கி உள்ளிட்ட மருத்துவ வசதிகளுடனும் ரத்தவெறியுடன் காத்திருந்த ரஷ்யப் படைகள், நேற்று (பிப்.24) தாக்குதலைத் தொடங்கின. உக்ரைனை உருக்குலைக்கும் நோக்குடன் புதின் நடத்தும் இந்தத் தாக்குதலில், முதல் நாளிலேயே ஏராளமான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

நேற்று உக்ரைன் சுகாதாரத் துறை அமைச்சர் ஓலே லயாஷ்கோ வெளியிட்ட வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 169 பேர் காயமடைந்திருக்கின்றனர். ஆயிரக்கணககனோர் வீடிழந்திருக்கின்றனர். இந்தப் போருக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் கண்டனக் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், ரஷ்யாவுக்குள்ளிருந்தும் எதிர்க்குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

இது தொடர்பாக, அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

கடும் சட்டவிதிகளை மீறி களமிறங்கிய மக்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே, போராட்டங்களுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கியிருக்கிறது ரஷ்யா. இதனால், எந்தப் பிரச்சினைக்கு எதிராகவும் வீதிக்கு வந்து போராடுபவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்யப்படுகிறார்கள். அதையெல்லாம் தாண்டி மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்து, உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய நேரப்படி மாலை 7 மணிக்கு கோஸ்டினி ட்வோர் வணிகச் சந்தைக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது, உக்ரைனியர்களுக்கு ஆதரவாகவும், புதினுக்கு எதிராகவும் பலர் முழக்கம் எழுப்பினர். பலர் கைதுசெய்யப்பட்டனர். சிலரைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். தலைநகர் மாஸ்கோவிலும் போராட்டங்கள் நடந்தன.

51 நகரங்களில் போராடிய 1,391 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர், மாஸ்கோவில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போர் தொடங்கியவுடனேயே, போருக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் களத்தில் இறங்குவார்கள் என கணித்த அரசு அதிகாரிகள், போராட்டங்களுக்காகப் பொது இடங்களில் கூடக் கூடாது எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். வெளிநாட்டு அரசியல் சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அனுமதியில்லாமல் நடத்தப்படும் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கடும் குற்றங்களை விசாரிப்பதற்காக ரஷ்ய அரசு உருவாக்கிய ‘விசாரணைக் குழு’ எனும் சிறப்புப் பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு எதிராகப் போராடினால் வழக்குகள் பாயும் எனும் அச்சம் பலரிடம் உள்ளது. போராட்டம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பலரும் தங்கள் அடையாளங்களை வெளியிட விரும்பவில்லை.

அரசுப் பணியாளர்களும் அதிருப்தி

பொதுமக்கள் மட்டுமல்லாது அரசு நிர்வாகத்திலும், அரசுசார் நிறுவனங்களிலும் பணிபுரியும் பலரும் போருக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். மவுனம் காக்காமல் போரை நிறுத்த குரல் எழுப்புமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளும் பகிரங்கக் கடிதத்தில் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சமாரா, ரியாஸான் உள்ளிட்ட நகரங்களின் நகராட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். பல துறை பிரபலங்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

அதேபோல் அரசுத் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலர் தங்கள் கண்டனக் குரலைப் பதிவுசெய்திருக்கிறார்கள். மாஸ்கோவில் ரஷ்ய அரசின் நிதியுதவியில் இயங்கிவரும் கலையரங்கின் இயக்குநர் யெலெனா கோவால்ஸ்கயா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். “ஒரு கொலைகாரரின் நிர்வாகத்தில் பணிபுரிவதும், அவரிடமிருந்து சம்பளம் பெறுவதும் சாத்தியமில்லாதது” எனத் தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போரைக் கண்டித்து ரஷ்யாவின் சுயாதீன பத்திரிகையாளர்கள், பிபிசி உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 250-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் என அறிவுத் தளத்தில் செயல்படும் பலரும் போரைக் கண்டித்திருக்கிறார்கள். சமூகவலைதளங்களிலும் போருக்கு எதிராகப் போராடுமாறு சக குடிமக்களுக்கு ரஷ்யர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

திருட்டைத் திசைதிருப்பும் முயற்சி

இந்தப் போருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸேய் நவால்னி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். டோஷ்ட் எனும் சுயாதீன தொலைக்காட்சி சேனல் வெளியிட்டிருக்கும் காணொலிப் பதிவில், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான இந்தப் போர், ரஷ்யக் குடிமக்களிடம் நடத்தப்பட்ட திருட்டை மூடி மறைப்பதற்காகவும், ரஷ்யாவுக்குள் நிலவும் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸேய் நவால்னி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸேய் நவால்னி

ஃபேஸ்புக்கில் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரினா லிட்வினோவிச், “நட்பு நாடான உக்ரைன் மீது, புதின் நடத்தும் இந்தத் தாக்குதலால் உங்களில் பலர் கையறு நிலையில் தவித்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும். ஆனால், நம்பிக்கையிழக்க வேண்டாம். ரஷ்யர்களாகிய நாம், புதின் கட்டவிழ்த்திருக்கும் போருக்கு எதிராக நிற்கிறோம். நாம் இந்தப் போரை ஆதரிக்கவில்லை. இந்தப் போர் நம் சார்பில் நடத்தப்படுவதல்ல” என்று கூறியிருக்கிறார். போருக்கு எதிராகப் போராட்டத்தில் குதிக்குமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

என்ன பதில் சொல்வது?

“மிகுந்த அதிர்ச்சியடைந்திருக்கிறேன். உக்ரைனில் எனது உறவினர்களும் அன்புக்குரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம், போனில் என்ன பதில் சொல்வேன்?” போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் இளம்பெண் உருக்கமாகக் கேட்டிருக்கிறார்.

நாகரிக உலகில் போருக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் மனிதாபிமானமற்றவர்களாகவே இருக்க முடியும். தங்கள் சொந்த நாடு வேறொரு நாட்டின் மீது படையெடுக்கும்போது மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த ஆட்சியாளரின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டனர் என்றே அர்த்தம். சொந்தக் குடிமக்களின் தார்மிக ஆதரவை இழக்கும் போர் ஒருபோதும் வெற்றியடையாது என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. புதினுக்கு உரிய பாடம் கிட்டட்டும்!

Related Stories

No stories found.