‘எங்கள் கப்பலை உக்ரைன் தாக்கிவிட்டது... எல்லோரும் தப்பிவிட்டோம்!’

கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட இழப்பை உறுதிப்படுத்திய ரஷ்யா
‘எங்கள் கப்பலை உக்ரைன் தாக்கிவிட்டது... எல்லோரும் தப்பிவிட்டோம்!’

கருங்கடல் பகுதியில் ‘மோஸ்க்வா’ எனும் ரஷ்யப் போர்க் கப்பல் மீது நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, அதைக் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கின்றனர் உக்ரைன் கடற்படையினர்.

இந்தத் தகவலை உக்ரைனின் ஒடெஸ்ஸா நகர ஆளுநர் மாக்ஸிம் மார்சென்கோ உறுதிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து டெலிகிராம் செயலியில் செய்தி வெளியிட்டிருந்த அவர், “கருங்கடலில் ‘நெப்டியூன்’ ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலைக் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கின்றன. உக்ரைனின் மகிமைக்கு இது சான்று” என்று கூறியிருந்தார். இந்தக் கப்பலில் ரஷ்யக் கடற்படையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர்.

இந்நிலையில் இந்தத் தகவலை ரஷ்யப் பாதுகாப்புத் துறையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. ‘கருங்கடல் பகுதியில் குண்டுவீச்சு தாக்குதலில் ஏற்பட்ட தீயால் மோஸ்க்வா கப்பல் கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது’ என்று கூறியிருக்கும் ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகம், அக்கப்பலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர் எனக் கூறியிருக்கிறது. இந்தச் செய்தி ரஷ்ய அரசு ஊடகமான டாஸ் (TASS) மூலம் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, “மோஸ்க்வாவுக்கு ஓர் ஆச்சரியம் நிகழ்ந்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்த உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அலெக்ஸீய் ஆரெஸ்டோவிச், “அந்தக் கப்பல் எரிந்துகொண்டிருக்கிறது. கூடவே கடலில் கடும் காற்று வீசிவருகிறது. இதனால் அவர்களுக்கு (ரஷ்ய வீரர்கள்) உதவி கிடைக்குமா எனத் தெரியவில்லை” என்றும் கூறியிருந்தார்.

சோவியத் ஒன்றிய யுகத்தில், உக்ரைனின் மிகோலிவ் நகரில் உருவாக்கப்பட்ட கப்பல் இது (அப்போது உக்ரைன், சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்தது). 1980-கள் முதல் இக்கப்பல் ரஷ்யக் கடற்படையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இதே கப்பல், உக்ரைன் போர் தொடங்கிய நாளில் அந்நாட்டின் பாம்புத் தீவை அடைய முயன்றபோது அங்கிருந்த சொற்ப வீரர்கள் மிகுந்த துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.