‘எங்கும் வெடிகுண்டு சத்தம்... எங்கள் குழந்தைகளை எழுப்பினோம்!’

போரின் முதல் நாள் பற்றி ஸெலன்ஸ்கி பகிர்ந்துகொண்ட திகில் தகவல்கள்
‘எங்கும் வெடிகுண்டு சத்தம்... எங்கள் குழந்தைகளை எழுப்பினோம்!’
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

உக்ரைனில் 66-வது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொண்டு துணிச்சலுடன் பதிலடி கொடுத்துவருகிறது உக்ரைன் ராணுவம். இந்தப் போரை உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி எதிர்கொள்ளும் விதம் பல தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. உக்ரைனைவிட்டுத் தப்பிச் செல்லுமாறு அமெரிக்கா சொன்ன யோசனையைக்கூட அவர் நிராகரித்துவிட்டார். இந்நிலையில், இந்தப் போரின் தொடக்கத்திலேயே தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிறைப்பிடிக்க ரஷ்யப் படைகள் முயன்றதாக ‘டைம்’ இதழுக்கு அளித்த பேட்டியில் ஸெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் உயரதிகாரிகளும் அந்தப் பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. அதைப் பற்றி அந்த பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கும் அவர், அன்றைய தினம் தலைநகர் கீவில் நடந்த சம்பவங்கள் தெளிவற்ற முறையில் தனக்கு நினைவிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

தாக்குதல் தொடங்கியதும் தானும் தனது மனைவி ஓலெனா ஸெலன்ஸ்காவும் தங்கள் 17 வயது மகளையும், 9 வயது மகனையும் எழுப்பியதாக அந்தப் பேட்டியில் கூறியிருக்கும் ஸெலன்ஸ்கி, வெடிகுண்டுகள் வெடிக்கும் ஓசை பலத்த சத்தத்துடன் கேட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

தான் குறிவைக்கப்படுவதாகத் தனக்குத் தெரியவந்ததாகவும், அதிபர் மாளிகை பாதுகாப்பற்றதாக மாறியதை உணர்ந்ததாகவும் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார். தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிறைப்பிடிக்க, ரஷ்யப் படையினர் விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் குதித்து முன்னேறி வந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

“அன்றைய இரவு நாங்கள் கண்ட காட்சிகளை அதற்கு முன்னர் திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறோம்” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் அதிபர் மாளிகையின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மாக். ரஷ்யப் படையினரின் தாக்குதலிலிருந்து அதிபர் மாளிகையைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

அன்றைய இரவு, அதிபர் மாளிகை மற்றும் அலுவலகங்களின் அனைத்து விளக்குகளும் அணைத்துவைக்கப்பட்டிருந்தன. அதிபர் மாளிகையில் ஸெலன்ஸ்கியின் மனைவியும் குழந்தைகளும் இருந்த நேரத்திலேயே இரண்டு முறை ரஷ்யப் படையினர் உள்ளே நுழைய முயன்றனர் என உக்ரைன் ராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒலெக்ஸி ஆரெஸ்டோவிச் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.