‘என்னை மன்னித்துவிடுங்கள்’ - கொல்லப்பட்ட உக்ரைனியரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய வீரர்

‘என்னை மன்னித்துவிடுங்கள்’ - கொல்லப்பட்ட உக்ரைனியரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய வீரர்
ரஷ்ய வீரர்

உக்ரைன் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடங்கியிருக்கிறது. இந்த விசாரணையின்போது, 21 வயது ரஷ்ய வீரர் ஒருவர் தன்னால் கொல்லப்பட்ட 62 வயது உக்ரைனியரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, உக்ரைன் மண்ணில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. புச்சா, மரியுபோல், கீவ் எனப் பல்வேறு நகரங்களில் உக்ரைனியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உலகை அதிரவைத்தன.

பிப்ரவரி 28-ல் வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுபாகிவ்கா எனும் கிராமத்துக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் அங்கு கடும் தாக்குதல் நடத்தின. அப்போது ரஷ்ய ராணுவ டாங்க் ஒன்றின் தளபதியான வாடிம் ஷிஷிமாரின் (21), காரில் இருந்தபடி ஒலெக்ஸாண்டர் ஷெலிபோவ் (62) எனும் முதியவரைத் துப்பாக்கியால் சுட்டார். இதில் தலையில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்தப் போரில், உக்ரைன் ராணுவத்தினரால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களிடம் போர்க் குற்ற விசாரணையை உக்ரைன் தொடங்கியிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட ரஷ்ய வீரர்களில் வாடிம் ஷிஷிமாரினும் ஒருவர். இதன் முதல் சுற்று விசாரணை நேற்று நடந்தது. அப்போது தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இரண்டாவது சுற்று விசாரணை இன்று நடந்தது. அப்போது ஒலெக்ஸாண்டர் ஷெலிபோவின் மனைவி ஷலிபோவாவும் பங்கேற்று சாட்சியம் அளித்தார்.

சம்பவம் நடந்த அன்று, தங்கள் வீட்டின் முற்றத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது தலையில் குண்டடிபட்டு தன் கணவர் உயிரிழந்து கிடந்ததாகவும் அதைப் பார்த்து அலறித் துடித்ததாகவும் ஷலிபோவா கூறினார்.

அதேசமயம், தன் கணவரைச் சுட்டுக்கொன்ற ரஷ்ய வீரர் ஷிஷிமாரினை விடுவித்து, அதற்கு மாற்றாக ரஷ்யாவிடம் பிடிபட்டிருக்கும் உக்ரைன் வீரர்களைக் கொண்டுவரச் சம்மதிப்பதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்தார். முன்னதாக, தன்னை மன்னித்துவிடுமாறு அவரிடம் ஷிஷிமாரின் கூறினார். குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்.

ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்திருக்கும் உக்ரைன் வீரர்களின் கதி என்ன எனத் தெரியவில்லை. உக்ரைனியர்கள் நாஜிக்கள் என்றும் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் ரஷ்ய எம்.பி-க்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தத் தம்பதிக்கு 27 வயதில் மகனும், இரண்டு பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர். 10,000-க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை ரஷ்யா நிகழ்த்தியிருப்பதாக உக்ரைன் கூறியிருக்கிறது. ஆனால், இந்தப் போரில் குடிமக்களைக் குறிவைக்கவில்லை என்றும், போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகிறது. இந்தப் போர்க் குற்ற விசாரணை குறித்தும் தங்களுக்குத் தெரியாது எனக் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in