ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் மரணம்: மருத்துவமனை ஜன்னல் வழியே விழுந்தாரா?

ரஷ்ய அதிபர் புதினுடன் ராவில் மகனோவ்
ரஷ்ய அதிபர் புதினுடன் ராவில் மகனோவ்

ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான லுக்கோயில் நிறுவனத்தின் தலைவர் ராவில் மகனோவ், காலமானதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்ததாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையின் ஜன்னல் வழியே கீழே விழுந்து இறந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நிலையில், உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்ட நிறுவனம் லுக்கோயில். இந்தப் போரால் பாதிக்கப்படுபவர்கள் மீது பரிவையும் அந்நிறுவனம் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1954-ல் பிறந்த மகனோவ், 1993 முதல் லுக்கோயில் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். 2020-ல் அந்நிறுவனத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள சென்ட்ரல் கிளினிக்கல் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார் (ரஷ்யாவின் அரசியல் புள்ளிகள் சிகிச்சை பெறும் முக்கியமான மருத்துவமனை என்பதால் ‘க்ரெம்ளின் மருத்துவமனை’ என்றும் அம்மருத்துவமனை அழைக்கப்படுகிறது).

ராவில் மகனோவ்
ராவில் மகனோவ்

இந்நிலையில், தீவிர நோய் பாதிப்பின் காரணமாக அவர் மரணமடைந்ததாக லுக்கோயில் நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது. லுக்கோயில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியவர் என அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும், மருத்துவமனையின் ஆறாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே விழுந்ததில் அவர் மரணமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஐநா எனப் பல்வேறு தரப்பிலிருந்து பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யத் தலைவர்கள், வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் மீது இந்தப் பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் லுக்கோயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வாகிட் அலெக்பெரோவ் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மகனோவின் மரணம் ரஷ்ய அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல என அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளர் திமித்ரீ பெஸ்கோவ் கூறியிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in