இந்தியா வந்திருக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன சொன்னார்?

இந்தியா வந்திருக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா வந்திருக்கும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் இந்தியா, ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ளவில்லை. மேலும், ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கவும் இந்தியா முடிவெடுத்திருக்கிறது. அதற்காக, ரூபிள் - ரூபாய் கரன்ஸி பரிவர்த்தனையை மேற்கொள்ள இரு நாடுகளும் இசைந்திருக்கின்றன.

எனினும், இந்த முடிவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விமர்சித்திருக்கின்றன. அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மாண்டோ, எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் ஏற்பாடு ஆழ்ந்த ஏமாற்றமளிக்கிறது என்று கூறியிருக்கிறார். ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

இத்தகைய நெருக்கடியான சூழலில், இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ். முன்னதாகச் சீனாவுக்குச் சென்றிருந்த லாவ்ரோவ், நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார்.

டெல்லியில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் லாவ்ரோவ். அப்போது, கருத்து வேற்றுமைகளையும் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறை மூலம் களையவே இந்தியா விரும்புவதாக ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய லாவ்ரோவ், கடந்த காலங்களில் கடினமான பல தருணங்களில் இந்திய - ரஷ்ய உறவு உறுதியாகத் தொடர்வதாகவும், அந்த ஒத்துழைப்பு தொடரும் என்பதில் தனக்கு எந்தச சந்தேகமும் இல்லை என்றும் பாராட்டினார். இந்தியாவுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு, ரஷ்ய வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமை தரப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இன்றைக்கு சர்வதேச விவகாரங்கள் அனைத்தையும் உக்ரைன் விவகாரத்துடன் இணைத்துக் குறைத்து மதிப்பிடும் போக்கை மேற்கத்திய நாடுகள் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், “நாங்கள் எதனுடனும் சண்டையிடவில்லை. இந்தச் சூழலை இந்தியா முழுக்க முழுக்க திறமையாக எதிர்கொண்டிருப்பதுடன், ஒருபக்க சார்பை எடுக்காமல் செயல்படுகிறது. அதை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியையும் லாவ்ரோ சந்தித்துப் பேசவிருக்கிறார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் இதுவரை மூன்று முறை ரஷ்ய அதிபர் புதினுடனும், இரண்டு முறை உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடனும் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

முன்னதாக, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்கவோ அல்லது வேறு வகையில் உதவவோ முயலும் நாடுகளும் பின்விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என சர்வதேசப் பொருளாதாரத்துக்கான அமெரிக்க தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங்கும் எச்சரித்திருந்தார்.

அமெரிக்கவாழ் இந்தியரான தலீப் சிங், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்திய வருகைக்கு முன்னதாக அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in