நடமாடும் தகன மேடைகள்... நரகமாக்கிய ரஷ்யப் படைகள்!

உறையவைக்கும் உக்ரைன் படுகொலைகள்
நடமாடும் தகன மேடைகள்... நரகமாக்கிய ரஷ்யப் படைகள்!

உக்ரைன் போரில் பயங்கரத்தின் புதிய கட்டத்துக்கான ஏற்பாடுகளில் ரஷ்யா இறங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியிருக்கிறார். அதில், ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். இதற்கிடையே, மரியுபோல் நகரில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நகர மேயர் வேடிம் பாய்சென்கோ தெரிவித்திருக்கிறார். 1.20 லட்சத்துக்கும் அதிகமானோர் உணவு, குடிநீர், மருந்து இல்லாமல், குளிரில் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

துறைமுக நகரான மரியுபோல் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி நகரையே உருக்குலைத்திருக்கின்றனர் ரஷ்யப் படையினர். இந்தச் சூழலில் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய நடமாடும் தகன மேடைகளை ரஷ்யப் படையினர் கொண்டுவந்திருப்பதாகவும், உயிரிழக்கும் உக்ரைனியர்களின் உடல்களை அதில் போட்டு தகனம் செய்வதன் மூலம் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார். போர் தொடங்கிய சில நாட்களிலேயே, இப்படியான ஒரு ஏற்பாட்டை ரஷ்யா செய்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், மரியுபோல் மேயரின் வார்த்தைகள் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ட்ரக் வடிவில் கொண்டுவரப்பட்ட தகன மேடைகளில் உக்ரைனியர்களின் சடலங்களை எரித்திருக்கிறார்கள் ரஷ்யப் படையினர். அதில் குழாய் போன்ற ஓர் அமைப்பு இருப்பதாகவும் அதில் வைத்து சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கும் பாய்சென்கோ இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டிருக்கிறார். நகரில் உள்ள மிகப் பெரிய அங்காடியில் உள்ள குளிர்பதனப் பெட்டிகளில் வைக்க ஏராளமான உடல்களை ரஷ்யப் படைகள் கொண்டுசென்றிருக்கிறார்கள்.

மரியுபோல் நகரில் மட்டும் ரஷ்யப் படையினர் 10,000 பேரைக் கொன்றிருப்பதாகக் கூறியிருக்கும் பாய்சென்கோ, இந்த எண்ணிக்கை 20,000-ஐத் தாண்டும் என்றும் அச்சம் தெரிவித்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் போர்வைகளால் சுற்றப்பட்டு வீதிகளில் வீசியெறியப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் அவர், மரியுபோல் நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் கிடைக்கும் வழிகளையும் ரஷ்யப் படைகள் அடைத்துவிட்டதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.

இந்தப் போரில் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் அகதிகளாகியிருக்கிறார்கள். குழந்தைகளில் மூன்றில் இரண்டு பேர் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரிழப்புகள், அகதிகளின் எண்ணிக்கை என எல்லாமே உத்தேசமானவைதான். அதைவிட அதிகமாகவே அசல் எண்ணிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, மரியுபோல் நகரில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் எம்.பி இவான்னா கிளைம்புஷ் கூறியிருக்கிறார். ஆனால், அது ரசாயன ஆயுதங்களால் ஏற்பட்ட பாதிப்பா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

மரியுபுபோல், புக்கா உட்பட பல்வேறு நகரங்களில் படுகொலைகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் என வெறியாட்டம் போட்டிருக்கின்றன ரஷ்யப் படைகள். ஏராளமான பெண்கள் பாதாள அறை ஒன்றில், 25 நாட்களுக்கு மேலாக அடைத்துவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் 9 பேர் கர்ப்பமடைந்திருப்பதாகவும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.