உக்ரைன் தலைநகர் மீது ட்ரோன் தாக்குதல்: இளம் தம்பதி உட்பட 3 பேர் கொல்லப்பட்ட சோகம்!

உக்ரைன் தலைநகர் மீது ட்ரோன் தாக்குதல்: இளம் தம்பதி உட்பட 3 பேர் கொல்லப்பட்ட சோகம்!

உக்ரைன் தலைநகரான கீவ் நகரம் மீது ட்ரோன் குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இளம் தம்பதியினரும் அடக்கம்.

கடந்த சில வாரங்களாக ரஷ்யாவுக்கு எதிராகப் பதில் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் நடத்திவருகிறது. தரைப் பகுதிகளில் உக்ரைன் படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ரஷ்ய ராணுவம், இப்போது காமிகாஸே ரக ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் தயாரான ‘ஷாஹேத் - 136’ ட்ரோன்களைத்தான் ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

முதன்முதலாக ஸாப்போரிஸியா நகர் மீது சில நாட்களுக்கு முன்னர் ட்ரோன் குண்டுகள் மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. அதில் சில கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், உக்ரைன் படைகள் 20-க்கும் மேற்பட்ட ட்ரோன் குண்டுகளைச் சுட்டுவீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது 28 ட்ரோன் குண்டுகள் தாக்குதல் நடத்தின. ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இவர்களில் போதான் மற்றும் விக்டோரியா இருவரும் கணவன் - மனைவி ஆவார்கள். விக்டோரியா கர்ப்பமாக இருந்த நிலையில், இருவரும் கொல்லப்பட்டிருப்பது உக்ரைனை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்தக் கட்டிடத்திலிருந்து இதுவரை 19 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் நடந்துவருகின்றன. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை முறியடிக்கும் பணிகளில் உக்ரைன் படைகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கின்றன. இன்று காலையில் மட்டும் 13 ட்ரோன்கள் உக்ரைன் விமானப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே, தங்கள் நாட்டு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அளிக்கவில்லை என்று ஈரான் அரசு மறுத்திருக்கிறது. எனினும், உக்ரைன் போரில் ஈரானினும் கலந்துகொண்டிருக்கிறதா என்பது குறித்து உறுதியான ஆதாரங்கள் திரட்டப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஜோஸெப் போரெல் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in