உக்ரைன் போருக்கு இடையே அமெரிக்க - ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் அரிய பேச்சுவார்த்தை: பின்னணி என்ன?

(இடது) அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷெர்கேய் ஷோய்கு
(இடது) அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷெர்கேய் ஷோய்கு

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அமெரிக்க - ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையே தொலைபேசி மூலம் நடந்த பேச்சுவார்த்தை கவனம் ஈர்த்திருக்கிறது.

பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. மே மாதத்தில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு ராணுவம், ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து பின்வாங்கச் செய்திருந்தது. அந்தச் சமயத்தில், ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷெர்கேய் ஷோய்குவுடன் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். போரை உடனடியாக நிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போரை விடாப்பிடியாகத் தொடர்கிறார். உக்ரைன் படைகளும் பதிலடித் தாக்குதல் நடத்தி பல இடங்களை மீட்டுவருகின்றன. இதற்கிடையே, ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான், ஸாப்போரிஸியா ஆகிய நான்கு பிரதேசங்களிலும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படும் என புதின் அறிவித்தார்.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியைப் பெற்ற உக்ரைன் படையினர் நீப்பெர் நதியின் மேற்குக் கரையைக் கைப்பற்றியதுடன், கெர்ஸான் நகரை நோக்கி முன்னேறிவருகின்றன. இதையடுத்து, உக்ரைன் படைகளைத் தடுத்து நிறுத்த பலமான ஏற்பாடுகளை ரஷ்ய ராணுவம் செய்துவருகிறது.

இந்நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினின் முயற்சியால், மீண்டும் ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷெர்கேய் ஷோய்குவுடன் பேச்சுவார்த்தை சாத்தியமாகியிருக்கிறது. நேற்று இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும், தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அப்போது உக்ரைன் போர் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. போர் நடந்துவரும் சூழலில், அமெரிக்க – ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அமெரிக்கத் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேசமயம், அதைத் தாண்டி ரஷ்யாவிடம் அமெரிக்கா வலியுறுத்திய அம்சங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்து எப்போது இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை.

ரஷ்யாவைப் பொறுத்தவரை, ‘தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும்; அப்போதுதான் ‘விபத்துகள்’ நேராமல் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, நேட்டோ நாடுகள் வட மேற்கு ஐரோப்பாவில் அணு ஆயுதத் தடுப்பு ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அக்டோபர் 17-ல் தொடங்கிய இந்த நடவடிக்கைகள் வரும் 30-ம் தேதிவரை நடக்கின்றன. இது வழக்கமான பயிற்சி நடவடிக்கைதான் என நேட்டோ விளக்கம் அளித்திருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதன் பின்னணி என்ன என்பது குறித்து, நேற்று நடந்த தொலைபேசி உரையாடலின்போது அமெரிக்காவிடம் ரஷ்யா கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in