‘அழுக்கு குண்டு வீசி எங்கள் மீது பழிபோட உக்ரைன் முயற்சி’ - ஐநாவுக்குக் கடிதம் எழுதிய ரஷ்யா!

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
ஐநா பாதுகாப்பு கவுன்சில்கோப்புப் படம்

‘அழுக்கு குண்டு (Dirty bomb) வீசி தாக்குதல் நடத்திவிட்டு எங்கள் மீது பழிபோட உக்ரைன் தயாராகிவருகிறது’ என்று ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடப்போவதாகவும் ரஷ்யா அறிவித்திருக்கிறது.

ரஷ்யத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக உக்ரைன் படைகள் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், ரஷ்யத் தரப்பிலிருந்து தினமும் புதிய அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான், ஸாப்போரிஸியா ஆகிய நான்கு பிரதேசங்களிலும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். அதற்கு முன்னதாக, தற்காப்புக்காக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தவும் ரஷ்யா தயங்காது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், உக்ரைன் பகுதிகளில் அந்நாட்டு ராணுவமே அழுக்கு குண்டுகளை வீசி சேதம் விளைவித்துவிட்டு அந்தப் பழியைத் தங்கள் மீது போடத் தயாராகிவருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது. இது புழுதி குண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

அழுக்கு குண்டு என்றால் என்ன?

வளி மண்டலத்தில் கதிரியக்கப் புழுதியையும் புகை மண்டலத்தையும் ஏற்படுத்திவிட்டு, மக்களைப் பதற்றத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தவல்லவை அழுக்கு குண்டுகள்.

கதிரியக்கச் சிதறலை ஏற்படுத்தும் குண்டு என்று அழைக்கப்பட்டாலும், இந்த வகை குண்டுகள் ஆரம்ப நிலை குண்டுகள் என்றே கருதப்படுகின்றன. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைவிடவும் மிகக் குறைந்த செலவில் இவற்றை உருவாக்கிவிடலாம். ஆனால், அணு குண்டுகள் அளவுக்கு இவை ஆபத்தானவை அல்ல. கதிரியக்கப் பொருட்களுடன் டைனமைட் போன்ற வழக்கமான வெடிபொருட்களை வைத்து அழுக்கு குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த குண்டு வெடித்தால் கதிரியக்கம் வெளிப்படும். எனினும், அது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்நிலையில், உக்ரைன் பகுதிகளில் அந்நாட்டு ராணுவமே அழுக்கு குண்டுகளை வீசி சேதம் விளைவித்துவிட்டு அந்தப் பழியைத் தங்கள் மீது போடத் தயாராகிவருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுதொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உயரதிகாரிகளுக்கு, ஐநாவுக்கான ரஷ்யத் தூதர் வாஸிலி நெபென்ஷியா கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘அழுக்கு குண்டைப் பயன்படுத்த உக்ரைன் மேற்கொள்ளும் முயற்சியை நாங்கள் அணு பயங்கரவாதச் செயலாகவே கருதுகிறோம். சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான திட்டத்தைக் கைவிடுமாறு உக்ரைனை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்த வேண்டும். இந்தக் கொடூரக் குற்றத்தைத் தடுத்து நிறுத்த ஐநா பொதுச்செயலாளர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது பற்றிப் பேசவிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் ரஷ்யா குறிப்பிட்டிருக்கிறது.

எனினும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. ‘இது வெளிப்படையான பொய்’ என பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர். இது பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள செசன்யா மாகாணத்தில் அழுக்கு குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த இரண்டு முறை முயற்சிகள் நடந்தன. எனினும் அவை தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in