‘கூடுதலாக மருத்துவ சாதனங்கள் அனுப்புங்கள்’ - இந்தியாவிடம் கோரும் ரஷ்யா

‘கூடுதலாக மருத்துவ சாதனங்கள் அனுப்புங்கள்’ - இந்தியாவிடம் கோரும் ரஷ்யா

உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஐரோப்பாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கலை ரஷ்யா எதிர்கொள்கிறது. இவற்றுக்கு இடையே, நீண்டகால நட்பு நாடுகளான இந்தியாவும் ரஷ்யாவும் எண்ணெய் வர்த்தகம், ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி எனத் தொடர்ந்து பரிவர்த்தனைகளை மேற்கொண்டுவருகின்றன.

சர்வதேச அளவில் பொருளாதாரத் தடைகளை ரஷ்யா எதிர்கொண்டிருக்கும் நிலையில், ரூபாய் - ரூபிள் கரன்ஸி பரிவர்த்தனை மூலம் அந்நாட்டுடன் ஏற்றுமதி - இறக்குமதி செய்துவருகிறது இந்தியா. தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வழங்க முன்வந்த ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக இந்தியா இறக்குமதி செய்வதை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில், கூடுதலாக மருத்துவ சாதனங்களை அனுப்புமாறு இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்திருக்கிறது. இரு நாடுகளின் மருத்துவ சாதனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையில் ஏப்ரல் 22-ல் ஒரு காணொலிச் சந்திப்பு நடக்கவிருக்கிறது. இந்திய மருத்துவ சாதன தொழில் துறை சங்கத்தின் சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் ராஜீவ் நாத் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை வளர்த்தெடுக்கும் நிறுவனமான ‘பிசினஸ் ரஷ்யா’வும் இதை உறுதிசெய்திருக்கிறது.

ரஷ்யாவின் மருத்துவ சாதன சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா, ரூபாய் - ரூபிள் கரன்ஸி பரிவர்த்தனை மூலம் மருத்துவ சாதன ஏற்றுமதியை அதிகரிக்க முடிவெடுத்திருக்கிறது. முன்பு இருந்ததைவிட 10 மடங்கு அதிகமாக, 26.2 மில்லியன் டாலர் அளவுக்கு ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in