திருடர்கள், கொலைகாரர்களைக் களத்தில் பயன்படுத்தும் ரஷ்யா: திகைக்க வைக்கும் உக்ரைன் போர்!

திருடர்கள், கொலைகாரர்களைக் களத்தில் பயன்படுத்தும் ரஷ்யா: திகைக்க வைக்கும் உக்ரைன் போர்!

உக்ரைனுக்கு எதிரான போரில் திருடர்களையும் கொலைகாரர்களையும் ரஷ்யா பயன்படுத்துவதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி பெரும் சேதங்களைச் சந்தித்த உக்ரைன், கடந்த சில வாரங்களாகப் பதிலடி தாக்குதல் கொடுத்து சில பகுதிகளை மீட்டெடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் திருடர்களையும் கொலைகாரர்களையும் ரஷ்யா பயன்படுத்தியிருப்பது குறித்த செய்தியை ‘தி கார்டியன்’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

ரஷ்யாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்ய ராணுவ அதிகாரிகள், அவர்கள் போரில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். இதன் மூலம், உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யப் படைகளில் ஏற்பட்டிருக்கும் ஆள் பற்றாக்குறையைச் சமாளித்துவருகிறார்கள்.

அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பரும் தனியார் ராணுவப் படையான வாக்னர் க்ரூப்பின் தலைவருமான யெவ்கேனி பிரிகோஸின், சில நாட்களுக்கு முன் ரஷ்ய சிறைக் கைதிகளிடம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், சில முக்கிய நிபந்தனைகளுக்குட்பட்டு 6 மாதங்கள் உக்ரைன் மண்ணில் போரிட்டால் அந்தக் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படும் என யெவ்கேனி பிரிகோஸின் பேசுவது பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா எதிர்கொண்டிருக்கிறது. எனினும், வீடியோ பதிவாக வெளியான இந்தச் சான்று ரஷ்யாவின் கோர முகத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. யெவ்கேனி பிரிகோஸின் நேரடியாகவே சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதும் தெரியவந்திருக்கிறது.

120 கைதிகள் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு உக்ரைன் மண்ணில் ரஷ்யாவுக்காகப் போரிட்டுவருகிறார்கள்.
போர் முடிந்ததும் அவர்களுக்கு ரஷ்ய அதிபர் பொதுமன்னிப்பு வழங்குவார் என்றும், ராணுவப் பணிக்காக அவர்களுக்கு மாதம் 1 லட்சம் ரூபிள்கள் (ஏறத்தாழ 1 .27 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உண்மைதான் என இவான் எனும் ரஷ்யக் கைதி ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த நிபந்தனையை ஏற்க அவர் முன்வரவில்லை. இனி அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் மண்ணில் ரஷ்யா நிகழ்த்தும் கொடூரமான போர்க் குற்றங்களுக்கு ரஷ்யாவின் இதுபோன்ற தந்திரங்களே காரணம் என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in