மாஸ்கோவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்!

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா புது ஆவேசம்
மாஸ்கோவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்!
உக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபடும் தங்கள் துருப்புகள் குறித்து ரஷ்யா வெளியிட்டிருக்கும் படம்

அமெரிக்காவிடம் தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், அதன் தூதரக அதிகாரியை மாஸ்கோவிலிருந்து வெளியேற்றி பதிலடி தந்துள்ளது ரஷ்யா.

உக்ரைன் போர் பதட்டத்தை முன்னிறுத்தி, அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல் முற்றி வருகிறது. ஓரிரு நாளில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுகளுக்கு, ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது. உக்ரைன் எல்லையில் வழக்கமான போர்பயிற்சிக்காகவே தங்கள் படைகள் முகாமிட்டிருப்பதாக ரஷ்யா சமாளித்து வருகிறது.

மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா 7 ஆயிரம் துருப்புகளை புதிதாக சேர்த்திருப்பதாக, அமெரிக்காவின் புதிய குற்றச்சாட்டையும் ரஷ்யா மறுத்துள்ளது. ’பிப்.17 அன்று உக்ரைனை ரஷ்யா தாக்கும் என்பதாக, அமெரிக்கா பரப்பிய பொய்ச் செய்திகளின் வரிசையில் இதுவும் ஒன்று’ என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உக்ரைனின் டான்பஸ் எல்லை பிராந்தியத்தில், உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்கள் செல்வாக்காக இருக்கும் பகுதியில், ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் படை மீது குற்றம்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலில், பள்ளி ஒன்று சேதமடைந்தத; 3 பெரியவர்கள் காயமடைந்தனர்.

உக்ரைனின் பாதுகாப்பு படை மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே வழக்கமாக நிகழும் இந்த தாக்குதலில், ரஷ்யா ஈடுபட்டதாக செய்திகள் வெளியானதற்கு அமெரிக்காவை ரஷ்யா குற்றம்சாட்டியது. தங்களது தொடர் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பார்ட் கோர்மேன் என்ற அமெரிக்க தூதரக அதிகாரியை மாஸ்கோவிலிருந்து வெளியேற்றி ரஷ்யா உத்தரவிட்டது. இவர் ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதரகத்தில், அதிகார அடுக்கில் இரண்டாம் கட்டத்தில் இருப்பவர். ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேற்றும் தனது நடவடிக்கைக்கான காரணம் குறித்து உடனடியாக ரஷ்யா விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.