‘ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு’ - அதிரடியாக அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வைஷ்கோரோட் நகரில், ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள்...
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வைஷ்கோரோட் நகரில், ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள்...

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

உக்ரைனின் பல மின்னுற்பத்தி நிலையங்கள், எரிசக்தி மையங்கள் மீது ஏற்கெனவே ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. தற்போது உக்ரைனில் மட்டுமல்லாமல், அதன் அண்டை நாடான மால்டோவாவிலும் ரஷ்யப் படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் மேலும் பல மின்னுற்பத்தி நிலையங்கள் சேதமடைந்திருக்கின்றன. அணுமின் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால், கடும் குளிரைச் சமாளிக்க முடியாமல் ஏராளமான உக்ரைனியர்கள் தவித்துவருகிறார்கள். குறிப்பாக, கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இதுதொடர்பாக, ஐநா சபையில் காணொலி வாயிலாகப் பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, இது நிச்சயம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்று கூறினார். குளிரில் கடும் பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்யாவை ஒரு பயங்கரவாத நாடாக அறிவித்திருக்கின்றனர். இதுதொடர்பாக, உக்ரைன் முன்வைத்த கோரிக்கையை நேற்று ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இது அடையாள ரீதியிலான அரசியல் நகர்வு மட்டுமே. இதனால் சட்டபூர்வமான பலன்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தப் போரின் பாதிப்புகளுக்கு ரஷ்யாவைப் பொறுப்பாக்கும் நடவடிக்கைகளுக்கான முதல் படி இது என்றே கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்பை உக்ரைன் பாராட்டியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in