‘சிறப்பு ராணுவ நடவடிக்கை பற்றி தவறான தகவல்’ - பிரிட்டன் நாளிதழின் இணையதளத்தை முடக்க ரஷ்யா சொல்லும் காரணம்!

‘சிறப்பு ராணுவ நடவடிக்கை பற்றி தவறான தகவல்’ - பிரிட்டன் நாளிதழின் இணையதளத்தை முடக்க ரஷ்யா சொல்லும் காரணம்!

உக்ரைன் போர் தொடர்பான செய்திகளை வெளியிட்ட பிரிட்டன் நாளிதழான ‘தி டெலிகிராஃப்’ நாளிதழின் இணையதளத்தை ரஷ்யா தடை செய்திருக்கிறது. ‘உக்ரைன் பிரதேசம் மீது ரஷ்யாவின் ஆயுதப் படைகள் நடத்திய சிறப்பு ராணுவ நடவடிக்கை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’ என ரஷ்ய அரசுக்குச் சொந்தமான செய்தி ஊடகமான ‘டாஸ்’ தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ரோஸ்கோம்நட்ஸார் இதை உறுதிசெய்திருப்பதாகவும் ‘டாஸ்’ குறிப்பிட்டிருக்கிறது.

நடமாடும் தகன மேடைகளைக் கொண்ட போர் வாகனங்களை உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா பயன்படுத்துவதாக பிப்ரவரி மாதம் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரையைத் தடை செய்து ரஷ்யாவின் தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டார். அந்தக் கட்டுரை தவறான தகவல்களைக் கொண்டிருப்பதால், தடைசெய்யப்பட்ட தகவல்களின் பட்டியலில் அது சேர்க்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்நடவடிக்கையை ரஷ்யா எடுத்திருக்கிறது.

‘தி கார்டியன்’ நாளிதழின் 5 செய்தியாளர்கள் உட்பட பிரிட்டனைச் சேர்ந்த 29 பத்திரிகையாளர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை கடந்த வாரம் அறிவித்தது. உக்ரைன் மீதான போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், ரஷ்யா தொடர்பாகத் தவறான தகவல்களை வெளியிடுவதைக் கண்டித்தும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in