போரின் எச்சம்: உடல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் உக்ரைன் - ரஷ்யா

ரஷ்யப் படைகளிடம் சரணடையும் உக்ரைன் வீரர்கள்
ரஷ்யப் படைகளிடம் சரணடையும் உக்ரைன் வீரர்கள்

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக இரு நாடுகளும் தலா 160 உடல்கள் என 320 உடல்களைப் பரிமாற்றம் செய்திருக்கின்றன. ரஷ்யா ஒப்படைக்கப்பட்டிருக்கும் உடல்கள் அனைத்தும் அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலையில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் உடல்கள் என்று அஸோவ் ரெஜிமென்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யப் படைகளின் முற்றுகைக்குள்ளான துறைமுக நகரான மரியுபோலில் உள்ள அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலையில் ஏராளமான உக்ரைன் வீரர்களும் பொதுமக்களும் பதுங்கியிருந்தனர். கோட்டை மாதிரியான வலுவான அமைப்பைக் கொண்ட உருக்கு ஆலையில் இருந்த உக்ரைன் வீரர்கள் வெளிப்படுத்திய தீரம், ரஷ்யாவின் ஊடுருவலுக்கு எதிரான அடையாளமாகக் கருதப்படுகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலை எதிர்கொண்டு ஏறத்தாழ மூன்று மாதங்கள் தாக்குப்பிடித்தபடி அங்கு பதுங்கியிருந்தனர் உக்ரைன் வீரர்கள்.

உருக்குலைந்த உருக்கு ஆலை
உருக்குலைந்த உருக்கு ஆலை

பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சரணடைந்தனர். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சரணடையும்படி அவர்களுக்கு உக்ரைன் உத்தரவிட்டதாக ‘இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் வார்’ எனும் சிந்தனை அமைப்பு கூறியது. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சரணடைந்த நிலையில், அவர்களின் கதி என்னவாகும் எனும் பதற்றம் உக்ரைன் மக்களிடம் ஏற்பட்டது. இதுவரை அந்த ஆலையிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் படைகளிடம் சரணடைந்ததாகவும், அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

ஜூன் 2-ல் (வியாழக்கிழமை) ஸாப்போரீஷியா நகரின் எல்லையில் இரு நாடுகளும் உடல்களைப் பரிமாறிக்கொண்டன. இதுகுறித்த தகவலை கடந்த ஜூன் 4-ல் உக்ரைன் வெளியிட்டது. அந்த ஆலை மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் உடல்கள் தலைநகர் கீவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அந்த உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கியிருக்கிறது.

அதேசமயம், அந்த ஆலையில் இன்னும் எத்தனை உடல்கள் இருக்கின்றன என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலை
அஸோவ்ஸ்டால் உருக்கு ஆலை

இதற்கிடையே ஸாப்போரீஷியா நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படைகள் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார். கிழக்குப் பகுதி நகரான சியாவெராடோனெட்ஸ்க்கைக் கைப்பற்றுவதிலும் ரஷ்யா தீவிரம் காட்டிவருகிறது. அந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் தொழிற்சாலைகள் நிறைந்த டோன்பாஸ் பிராந்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என ரஷ்யா கருதுவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in