உக்ரைன் போர்: லிவிவ் நகர் மீது ரஷ்யா கடும் தாக்குதல்

மேற்குப் பகுதி நகரங்கள் மீது தாக்குதலை அதிகரிக்கும் ரஷ்யா
உக்ரைன் போர்: லிவிவ் நகர் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள இர்பின் நகரில், ரஷ்ய குண்டுவீச்சில் சேதமடைந்த கட்டிடங்கள்

உக்ரைன் போரின் 18-வது நாளான இன்று ரஷ்யப் படைகள், பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றன. குறிப்பாக, போலந்து எல்லையில் உள்ள லிவிவ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு முன்பிருந்தே வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவுகளில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலி கேட்டதாக லிவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும், எச்சரிக்கை சைரன் ஒலியைத் தொடர்ந்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

லிவிவ் நகர் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ‘கீவ் இண்டிபெண்டன்ட்’ ஊடகம் தெரிவித்திருக்கிறது. லிவிவ் நகரிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள யாவோரிவ் ராணுவப் பயிற்சி மைதானம் குண்டுவீச்சில் சேதமடைந்திருக்கிறது.

முதலில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா, கடந்த சில நாட்களாக மேற்குப் பகுதி நகரங்கள் மீது தாக்குதலை விரிவுபடுத்தியிருக்கிறது.

மேற்கு எல்லை வழியே, போலந்து மூலம் போர்த் தளவாடங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பிவருகின்றன. இதையடுத்தே உக்ரைனின் மேற்குப் பகுதி நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்திவருகிறது.

Related Stories

No stories found.