உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!- குறிவைக்கப்பட்டது பள்ளிக்கூடம்

குண்டுவீச்சு தாக்குதலில் 2 ஆசிரியர்கள் படுகாயம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!- குறிவைக்கப்பட்டது பள்ளிக்கூடம்

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது நாளை ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை இருந்து வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷ்யா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளதால் உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

அதே நேரத்தில், ரஷ்யா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் அறிவித்துள்ளன. மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள். இதனால், ரஷ்யா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன.

இந்நிலையில், உக்ரைன் மீது இன்று ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. டான்பஸ் உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றது. அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியர்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை யார் நடத்தியது என்று இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால், ரஷ்யாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in