உக்ரைன் - ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

உக்ரைன் - ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

உக்ரைன் - ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையே நேற்று துருக்கியில் நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சாலைகள் எங்கும் மனித உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. 1,207 சடலங்கள் சாலைகளிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றன. புதைக்க இடம் இல்லாததால் ஆங்காங்கே மொத்தமாக சடலங்களைப் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் மரியுபோல் நகரில் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். இதுவரை 23 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கிறார்கள். தலைநகர் கீவிலிருந்து 50 சதவீதம் பேர் வெளியேறிவிட்டார்கள். மருத்துவமனைகளையும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறது ரஷ்யா.

உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்குச் சென்றிருக்கும் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

உக்ரைன் அதிபர் ஆவேசம்

ரஷ்ய ஆட்சியாளர்களைச் சுட்டிக்காட்டி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, “நீங்கள் நிச்சயம் போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்தப்படுவீர்கள். ரஷ்யக் குடிமக்களால் வெறுக்கப்படுவீர்கள். பல ஆண்டுகளாக உங்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் உங்கள் பொய்களால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைத் தங்கள் பர்ஸில் கனம் குறையும்போது உணர்வார்கள். தங்கள் வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும்போது, தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் திருடப்படுவதாக உணரும்போது உங்கள் பொய்களின் பாதிப்பை ரஷ்ய மக்கள் அதிகமாகவே உணர்வார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா
உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா

துருக்கியின் முயற்சி

இத்தகைய சூழலில் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுத் சவுஷோலோவின் முயற்சியால், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் த்மைத்ரோ குலேபா, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இடையே நேற்று துருக்கியின் அன்டால்யா நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் உயரதிகாரிகளும் உடன் இருந்தனர்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ்
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ்

எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. பின்னர் அதுகுறித்துப் பேசிய செர்கே லாவ்ரோவ், ரஷ்யா அல்லது மேற்கத்திய நாடுகள் என இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவெடுக்குமாறு உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் அழுத்தம் தான் இந்தப் போருக்கு வித்திட்டது என விமர்சித்தார். ரஷ்யப் படைகளின் தாக்குதலில் உக்ரைன் மக்கள் கொல்லப்படுவது குறித்தும் சரியான பதிலை அவர் சொல்லவில்லை. அதுகுறித்து வரும் தகவல்கள் ரஷ்யாவின் எதிரிகளிடமிருந்து வரும் ’பரிதாபமான கூச்சல்கள்’ என்று சொல்லிப் புறக்கணித்தார். ரஷ்யா உக்ரைனை ஊடுருவவே இல்லை என்றும் சாதித்தார்.

மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் குலேபா கோரிக்கை விடுத்தார்.

ஸெலன்ஸ்கி - புதின் பேச்சுவார்த்தைக்கு அச்சாரமா?

நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றான துருக்கி, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக நடந்துகொள்ள முயற்சிக்கிறது. நேட்டோவில் அங்கம் வகிக்கும் பிற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், துருக்கி அப்படிச் செய்யவில்லை. அதேசமயம், உக்ரைன் மீதான தாக்குதலைத் துருக்கி கண்டிக்கிறது. கூடவே, தங்கள் நாட்டில் தயாரான ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்கி உதவுகிறது.

முன்னதாக, இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, துருக்கி அதிபர் எர்டோகனின் ஏற்பாட்டில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி - ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் வாய்ப்பு உருவாகும் என்று துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுத் சவுஷோலோ நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.