இந்தியாவின் அடுத்த வெற்றி... வெற்றிகரமாக வெளியேறியது பிரக்யான் ரோவர்!

இந்தியாவின் அடுத்த வெற்றி... வெற்றிகரமாக வெளியேறியது பிரக்யான் ரோவர்!

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்துள்ள  சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து  வெற்றிகரமாக  பிரக்யான் ரோவர் வெளியே  அனுப்பப்பட்டுள்ளது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக  கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி  சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தே இந்த சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டது.

விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. அதன் பின் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது. அதனை நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானிகள் செலுத்தி வந்தனர். திட்டமிட்டபடி நேற்று மாலை 6.04 மணிக்கு  சந்திரயான் 3 விண்கலம்  வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப் பட்டது. 

விக்ரம் லேண்டர் நிலாவை தொட்டவுடன் சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோவுக்கு ஒரு மெசேஜை அனுப்பியது. "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான்." என அது மெசேஜ் அனுப்பியதாக இஸ்ரோ ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. இதன்மூலம்  நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையையும்,  விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. 

"விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது." என்று ட்விட்டரில் இஸ்ரோ பதிவிட்டு உள்ளது. இந்த நிலையில் விக்ரம் லேண்டரின் மீது படிந்து இருந்த நிலவின் மணல் தூசு விலகியதைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேற்றப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டரால் ஏற்பட்ட புழுதி ரோவரின் மீது படியாமல் இருக்க சுமார் நான்கு மணி நேரம் வரை பிரக்யான் ரோவர் வெளியேற்றப்படவில்லை. புழுதிப்படலம் அகன்றதை அடுத்து வெளியே இறங்க  ரோவருக்கு ஆர்பிட்டர் கொடுத்த சிக்னலை லேண்டர் பகிர்ந்து கொண்டது. 

அதைத் தொடர்ந்து விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடைந்தது, பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கியது. பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக்கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து நிலவின் தரைக்கு வந்தது.

இது ஒரு சின்ன சோதனைக் கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்யும்.  மொத்தம் 6 சக்கரங்கள் உள்ள லேண்டர் தொகுதி  26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ எடை கொண்டது.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் 15 தினங்களுக்கு அது நிலவிலிருந்து ஆய்வுகளை  மேற்கொள்ள உள்ளது.  இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in