பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்... மனைவியுடன் ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபாடு!

பிரதமர் ரிஷிசுனக் அக்‌ஷதா மூர்த்தி
பிரதமர் ரிஷிசுனக் அக்‌ஷதா மூர்த்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் இங்கிலாந்து மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தீபங்களின் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை வெளிநாடுகளில் வாழும் இந்துக்களின் மத்தியிலும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியினரான இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

10 டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் ஏராளமான இந்துக்கள் கலந்து கொண்டனர். பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகம் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "பிரதமர் ரிஷி சுனக் தீபாவளிக்கு முன்னதாக இந்து சமூகத்தைச் சேர்ந்த விருந்தினர்களை வரவேற்றார். இது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.

இந்த வார இறுதியில் கொண்டாடும் இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் சுப தீபாவளி வாழ்த்துகள் !" என்று தெரிவித்துள்ளது. மேலும் ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா மூர்த்தி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்தில் பாரம்பரிய தீபங்களை ஏற்றி வைக்கும் படங்களும் பகிரப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இந்து மதத்தை கடைபிடித்து வருகிறார். ஜி 20  உச்சி மாநாட்டிற்காக சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அக்‌ஷர்தாம் கோயிலில் ரிஷி சுனக் - அக்‌ஷதா தம்பதியினர் பிரார்த்தனை செய்தனர். அப்போது பேசிய அவர், "நான் ஒரு பெருமைமிக்க இந்து. நான் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன், அப்படித்தான் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் தீபாவளி பண்டிகை கொண்டாடியிருப்பதை  உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் வரவேற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in