ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐநாவில் தோல்வி

இந்தியா, சீனா வாக்கெடுப்பை புறக்கணித்தது
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐநாவில் தோல்வி

இந்தியா, சீனா வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது.

உக்ரைனில் ரஷ்ய படைகள் உக்கர தாண்டவமாடி வரும் நிலையில், 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா அதிபர் புதின் அதனை புறந்தள்ளிவிட்டு 3வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. 15 உறுப்பினர்களை நாடுகளை கொண்ட இந்த கவுன்சிலில், தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்கா, அயர்லாந்து, நார்வே, மெக்சிகோ, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானத்தை புறக்கணித்தன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளில் ஒன்றான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.

முன்னதாக, தீர்மானத்தின் மீது பேசிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் நிலவும் சூழல் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டு உள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும், மீண்டும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in