‘ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்!’ - இலங்கை நிதியமைச்சர் உறுதி

இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி
இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்கும் நிலையில், ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சப்ரி உறுதியளித்திருக்கிறார்.

இது தொடர்பாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் இதழாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் இவ்விவகாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பம்தான் காரணம் எனக் கூறி, அவர்கள் அனைவரும் பதவிவிலக வேண்டும் என மக்கள் போராடிவருகின்றனர். ஒருகட்டத்தில் இலங்கை அமைச்சரவையிலிருந்து அனைவரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து புதிய அமைச்சரவை அமைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்ச, நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்தார். அதில் ஏற்கெனவே நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும், கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் பணியை எதிர்கொள்ள வேண்டியிருந்த சூழலில் ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் அலி சப்ரி. ஆனால், அவரது ராஜினாமாவை கோத்தபய ஏற்கவில்லை. இதையடுத்து நிதியமைச்சர் பதவியில் தொடரும் அலி சப்ரி, இலங்கையின் சார்பில் பன்னாட்டு நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

வெளிநாட்டுக் கடன் தொகையான 50 பில்லியன் டாலரைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைப்பதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து உதவியை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இம்முடிவை இலங்கை அரசு எடுத்திருக்கிறது. இதற்கு முன்னர் 16 முறை பன்னாட்டு நாணய நிதியத்திடம் உதவி பெற்றிருக்கிறது இலங்கை. எனினும், பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா துறையில் ஏற்பட்ட சரிவு, இயற்கை விவசாயம் எனும் பெயரில் ரசாயன உரங்களை அவசரகதியில் தடைசெய்து விளைச்சலில் ஏற்படுத்திய பாதிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்துவந்ததால் எரிபொருள், உணவுப் பொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கியது என ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்த இலங்கை, ரனில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்திய பின்னரும் பன்னாட்டு நாணய நிதியத்தை அணுகத் தயங்கியது.

கரோனா பொதுமுடக்கத் தளர்வுகளால் சுற்றுலாத் துறை மீட்சியடைந்துவிடும் எனும் நம்பிக்கையிலும், உலக அளவில் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துவிட்டால், அந்நாட்டைச் சார்ந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவிடலாம் என்று போட்ட தப்புக் கணக்கின் காரணமாகவும் பன்னாட்டு நாணய நிதியைத்தை அணுகாமல் இலங்கை அரசு காலம் தாழ்த்திவந்ததாகக் கருதப்படுகிறது.

இப்படியான சூழலில், சீர்திருத்தம் தவிர்க்க முடியாதது எனக் கூறியிருக்கும் அலி சப்ரி, “வறுமை ஒழிப்புத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஏழை மக்களுக்கு நிச்சயமாக ஒரு பாதுகாப்பு வலை தேவைப்படுகிறது. ஏழைகளை நாம் புறக்கணிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். பெருந்தொற்றுக் காலத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் வறுமைக்கோட்டுக் கீழே தள்ளப்பட்டிருப்பதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், “கட்சி ரீதியான அரசியல் குறித்து எங்களால் இப்போதைக்குச் சிந்திக்க முடியாது. எல்லாவற்றையும் தாண்டி நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருக்கிறது - அரசியல் ரீதியிலான சவால்களை எதிர்கொள்வது உட்பட” என்று கூறியிருக்கிறார் அலி சப்ரி.

பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கிக் குழு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கும் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசவிருக்கிறார். ஏற்கெனவே இந்த ஆண்டில் 2.4 பில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கியிருக்கிறது. கூடவே, எரிபொருள் இறக்குமதி உள்ளிட்டவற்றுக்காக 500 மில்லியன் டாலர் கடனுதவியையும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in