வென்றது நிறவெறி: ரிஷியின் தவம் கலைக்கப்பட்டது எப்படி?

இந்திய வம்சாவளியைப் புறக்கணித்த பழமைவாதிகள்
ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ்
ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ் இடையிலான போட்டியின் இறுதிச் சுற்றில் ரிஷி தோல்வியைத் தழுவியுள்ளார். பிரதமருக்கான ரேஸில் ஆரம்பம் முதலே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வம்சாவளியான ரிஷி தோற்கடிக்கப்பட்டதின் பின்னணியில் அங்கே அதிகரித்துவரும் வெள்ளையின வாதம் பல்லிளித்துள்ளது.

விறுவிறு வரவேற்பு கண்ட ரிஷி

பிரிட்டன் அரசியலில் ரிஷி சுனக்கின் வளர்ச்சி அசாத்தியமானது. மிகச் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்து, நல்ல பள்ளி கல்லூரிகளில் பயில்வதற்காகத் தடுமாறி, வணிகம் அரசியல் என படிப்படியாக உயர்ந்தவர் ரிஷி சுனக். பிரிட்டன் பிரதமர் ரேஸில் பங்கேற்பது குறித்து ஆரம்பகட்டத்தில் அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயின்று பிரிட்டன் நிதி நிறுவனங்களில் தடம் பதித்த ரிஷி, அவரது பொருளாதார அறிவுக்காக அரசியலில் உள்ளிழுக்கப்பட்டார். ஒரு பொருளாதார நிபுணராக, நிதித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பின்னர் நேரடி அரசியலில் எம்.பி., மற்றும் நிதியமைச்சராகவும் உயர்ந்தார். பெருந்தொற்று காலம் பிரிட்டனைப் புரட்டிபோட்டபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிவித்து நாட்டு மக்களின் வரவேற்பை அள்ளினார். அப்போது பிரதமராக இருந்த போரிஸ் ஜான்ஸன் பெயர் ரிப்பேராகி இருந்ததில், ரிஷி அவர் இடத்தை நிரப்பவும் செய்தார்.

குருவை மிஞ்சிய சிஷ்யன்

ரிஷியின் அரசியல் பயணத்தில், போரிஸ் ஜான்ஸனுக்குப் பெரும் பங்கு உண்டு. ஊரடங்கு காலத்தில் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் உற்சாக மது விருந்தில் ஆழ்ந்திருந்த விவகாரம் வெளியே வெடித்தபோது, கடும் கண்டனங்களுக்கு போரிஸ் ஆளானார். பிரதமர் இல்லத்தைப் புனரமைக்கும் நிதியில் முறைகேடு, பாலியல் எம்பிக்களுக்கு அனுசரணையாக இருந்தது உள்ளிட்ட உதிரி புகார்களும் சேர்ந்துகொண்டதில், மக்கள் மத்தியிலான வரவேற்பில் போரிஸ் தொடர் சரிவு கண்டார். மக்கள் சீற்றம் தணியட்டும் தன்னைச் சுருக்கிக்கொண்டு, நிதியமைச்சரும் தனது சிஷ்யகோடியுமான ரிஷி சுனக்கை முன்னிறுத்த ஆரம்பித்தார். பிரதமரின் இடத்திலிருந்து பெருந்தொற்றுகால மீட்பு நடவடிக்கைகளை அறிவிக்கும் பொறுப்புக்கு ரிஷிக்கு வந்தது.

அன்றாட மருத்துவ முன்னெடுப்புகளுக்கு அப்பால் அவர் அறிவித்த நிதி சலுகைகளும் ரிஷி மீதான மக்கள் அபிப்பிராயத்தை அதிகப்படுத்தின. ஒரு கட்டத்தில் பதிவி விலக வேண்டிய நெருக்கடி அதிகரித்தபோது, ரிஷியை முன்னிறுத்தி வழிவிடுவதை அரசியல் சாதுரியமாகக் கருதினார் போரிஸ். ஆனால் அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் ரிஷியே தொடர்வெற்றி பெறுவார் என்றெல்லாம் வெளியான கருத்துக்கணிப்புகளால் போரிஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ்

ரேஸில் முன்னேறிய லிஸ்

ஆளும் கன்சர்வேடிக் கட்சிக்கான தலைவரே நாட்டின் பிரதமராவார் என்பதால், கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பல சுற்றுகளை உள்ளடக்கிய இந்த தேர்தலின் தொடக்கத்தில் எதிர்பார்த்தது போலவே ரிஷி முன்னிலை வகித்தார். அவருடன் போட்டியிட்ட எழுவரில் ஒருவராகவே லிஸ் ட்ரஸ் இருந்தார். நாட்டின் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் கட்சியில் அபிமானம் பெற்றவர்களில் ஒருவர். ஆனால் பிரதமர் நாற்காலியை நெருங்கும் அளவுக்கு அறுதியான தலைவரல்ல. தொடக்க சுற்றுகளுக்கு பின்னர் முயல் ரிஷியுடன் ஆமை லிஸ் மோத ஆரம்பித்தது. குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவராக கழன்றுகொள்ள, ரிஷி - லிஸ் இடையில்தான் மோதல் என்று முடிவான பின்னர் லிஸ் தனது அணுகுமுறையை மாற்ற ஆரம்பித்தார்.

தேர்ந்த அரசியல்வாதியான லிஸ், பொருளாதார நிபுணர் ரிஷியுடனான மோதலில் தனது அரசியல் அனுபவத்தை இறக்கினார். ரிஷி அறிவித்த நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திடமான நடவடிக்கைகளுக்கு வரவேற்பு நிலவியபோதும், வரி விரிப்புகள் குறைப்பு தொடர்பான செலவினங்களில் அவர் விதித்த கட்டுப்பாடுகள் அதிருப்தியை உருவாக்கின. தனது கொள்கையின் ஆழம் முழுவதுமாகச் சென்றடையவில்லை என்பதை ரிஷி தாமதமாகவே உணர்ந்தார். அதற்குள் லிஸ் முந்திக்கொண்டார். வரி விதிப்பு குறைப்பை வலியுறுத்தும் அறிவிப்புகளில் லிஸ் ஆதரவை அறுவடை செய்ய ஆரம்பித்தார். ரிஷி சுதாரித்து வரி விதிப்பின் மாற்றங்களை பின்னர் அறிவித்ததும், அரசியல் ரீதியில் பின்னடைவையே தந்தது.

கால்வாரிய குரு

அரசியல் களத்தில் பல தருணங்களில் ரிஷியை முன்னிறுத்திய போரிஸ், தனது பிரதமர் நாற்காலியை ரிஷிக்கு விட்டுத்தரவும் முன்வந்தார். வெளியேறுவது என முடிவான பின்னர் தனக்கு அணுக்கமானவர் அந்த இடத்தில் அமர்வது எதிர்கால அரசியலுக்கு தோதானது எனக் கணக்கிட்டார். ஆனால் பத்திரிக்கைகளில் வெளியான பெருவாரி கருத்துக்கணிப்புகளில் பிரதமராக அறிவிக்கப்பட்ட ரிஷி சுனக், சற்று மிதப்பில் குருவை விஞ்சத் துணிந்தார்.

போரிஸுக்கு எதிரான அமைச்சர்களின் தொடர் ராஜினாமாவைத் தொடங்கி வைத்ததில் ரிஷி புண்ணியம் கட்டினார். ரிஷியை தொடர்ந்தே போரிஸுக்கு எதிரான சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு வீரியம் கண்டது. இது அவரைக் கசப்பில் ஆழ்த்தியது. பதிலடியாக ரிஷியின் மனைவி அக்‌ஷதாவுக்கு எதிரான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையான அரசு ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே கசிந்ததை ரிஷி எதிர்பார்க்கவில்லை. குருவை சமாதானப்படுத்த அவரை நேரில் சந்திக்க முயன்றார். ஆனால் ரிஷி வெளிப்படையாகப் புலம்பும் அளவுக்கு போரிஸ் பாராமுகமானார்.

ரிஷி - போரிஸ்
ரிஷி - போரிஸ்

உள்ளடி வெள்ளையர்

கன்சர்வேடிவ் பெயரைப் போலவே பழமைவாதிகள் நிரம்பிய அக்கட்சியின் வாக்காளர்களில் பெரும்பாலானோர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; குறிப்பாக வெள்ளையின ஆதரவாளர்கள். ரிஷிக்கு இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் மத்தியில் ஆதரவு அதிகரித்திருந்தது. இதுவே பொதுத் தேர்தலாக இருந்திருப்பின் ரிஷிக்கு ஆதாயம் சேர்ந்திருக்கும். கன்சர்வேடிவ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வாக்காளர்கள் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் உள்ளடி ’லாபி’ அரசியல் வேலை செய்யத் தொடங்கியது. பன்முக தேசம் என்ற போர்வை வெளியில் தென்பட்டபோதும் அமெரிக்காவைப் போலவே பிரிட்டனிலும் நிறவெறி ஊறிப்போயுள்ளது. ரிஷியின் தோல் நிறம் பழமைவாதிகளால் அதிகம் வெறுக்கப்பட்டது.

ரிஷியின் தாத்தா குடும்பம் வட இந்தியப் பின்னணி கொண்டது. ரிஷியின் மனைவி அக்‌ஷதா தென்னிந்தியர். இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவரான நாராயண மூர்த்தியின் மகள் இவர். எனவே ரிஷி - அக்‌ஷதாவுக்கு பிரிட்டனில் இந்திய வம்சாவளியினர் ஆதரவு அதிகம் உண்டு. இவர்கள் மத்தியில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் அங்கமாகத் தங்களை ஆட்டுவித்த பிரிட்டனை, இந்திய வம்சாவளி ஒருவர் ஆளப்போவதை அதிகம் சிலாகித்தது ரிஷிக்கு எதிரான அதிர்வுகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றதுக்கு நிகரான வரலாறு பிரிட்டனில் நடந்துவிடக்கூடாது என்பதில் நிறவெறியாளர்கள் தீயாய் உழைத்தனர்.

சீண்டிய இந்திய பெருமிதம்

அக்‌ஷதாவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் வாயிலாகக் கிடைக்கும் டிவினெட் வருமானத்துக்கு இந்தியாவில் வரி கட்டி வருகிறார். பிரிட்டனில் வரி செலுத்த அவசியமில்லை என்ற போதும், தேசப்பற்றில்லாத குடும்பம் என்ற ஏச்சுக்கு ரிஷி தம்பதி ஆளாக இதுவே காரணமானது. பிரிட்டனிலும் வரி செலுத்தப்போவதாக அக்‌ஷதா பின்னர் அறிவித்தபோதும் அது எடுபடவில்லை. இன்ஃபோசிஸ் மட்டுமன்றி பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் அக்‌ஷதாவுக்கு சொத்துக்கள், வணிக நிறுவனங்கள் உண்டு. அந்த வகையில் பிரிட்டனின் பெரும் பணக்காரர்களில் ரிஷி - அக்‌ஷதா தம்பதியரும் ஒருவர். சொத்தின் நிகர மதிப்பில் இங்கிலாந்து ராணியைவிட அக்‌ஷதா பணக்காரர் என்ற ஒரு புள்ளிவிபரம் வெளியாகி பிரிட்டன் பழமைவாதிகளைத் துணுக்குறச் செய்தது.

அதே நேரம் வழக்கமான சுதந்திர தின முழக்கங்களில் ஒன்றாக பிரிட்டன் களவாண்டு சென்ற இந்தியாவின் கோஹினூர் வைரத்தைத் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் அதிகரித்தன. இந்த வைரமே இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை மதிப்புமிக்கதாக அலங்கரித்து வருகிறது. இந்தியாவின் புராதன சிறப்புமிக்க சிலைகள் பலவற்றை பிரிட்டன் அருங்காட்சியகங்கள் திரும்ப ஒப்படைத்து வந்தபோதும், ராணியின் வைரத்தைக் குறிவைக்கும் இந்தியர்களின் உரிமைக் குரலை பிரிட்டன் நிறவெறியர்களால் செரிக்க முடியவில்லை.

மனைவி அக்‌ஷதாவுடன் ரிஷி
மனைவி அக்‌ஷதாவுடன் ரிஷி

வென்றது நிறவெறி லாபி

இதுமட்டுமன்றி பிரிட்டன் மக்களால் அதிகம் வெறுக்கப்படும் ரஷ்யாவை முன்னிறுத்தியும் ரிஷிக்கு அவப்பெயர் சேர்த்தனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ரஷ்யக் கிளை தொடர்பான செய்திகளை ஊதிப் பெருக்கி, ரிஷியின் குடும்பம் ரஷ்யாவில் வர்த்தகத் தொடர்புகளை வளர்த்துவருவதாக செய்திகள் பரப்பினர். இந்தப் புரளிக்கு லிஸ் ட்ரஸ்ஸின் வெளியுறவு அமைச்சக சகாக்கள் உதவியதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

இவற்றுக்கு அப்பால் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ரிஷி படிக்கும்போது பெற்றிருந்த க்ரீன் கார்டு சலுகையை அவர் பிரிட்டனின் எம்பி-யான பிறகும் துறக்கவில்லை என்ற பழைய குற்றச்சாட்டும் புத்துயிர் பெற்றது. இத்தனையும் சேர்ந்ததுதான் தொடக்கச் சுற்றுகளில் முன்னிலை வகித்த ரிஷி சுனக் இறுதிச் சுற்றுகளில் பின்தங்க காரணமானது. ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ் இடையிலான நேரடி மோதலின் முடிவில் சுமார் 15 சதவீத வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டிருக்கிறார் ரிஷி சுனக்.

ரிஷி இனி?

பிரிட்டன் மக்கள் மத்தியில் ஆதரவுக்கு அடிகோலியது ரிஷியின் பொருளாதார அறிவு என்றபோதும், அரசியலைப் பொறுத்தவரை 42 வயது ரிஷிக்கு அவருக்கு இன்னமும் அனுபவம் தேவை என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கட்சித் தேர்தலில் கால்வாரப்பட்ட போதும் பொதுத்தேர்தலில் ரிஷிக்குப் புதிய புறப்பாடு காத்திருக்கிறது.

கட்சித் தேர்தலுக்கு பதிலாக நடைபெற்றது பொதுத்தேர்தலாக இருப்பின், இளைஞர்களின் பெருவாரியான ஆதரவுடன் ரிஷி எளிதில் பிரதமராகி இருப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். வரும் 2024 தேர்தலில் அதற்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதற்கு முதலில் கட்சியின் அங்கீகார வேட்பாளராக ரிஷி முன்னிறுத்தப்பட வேண்டும் அல்லது அரசியல் வியூகங்களில் ரிஷி அதிரடி காட்ட வேண்டும். அதிசயங்கள் நிகழுமா, பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in