எங்கும் கலவரம்: என்ன நடக்கிறது இராக்கில்?

எங்கும் கலவரம்: என்ன நடக்கிறது இராக்கில்?

இராக் தலைநகர் பாக்தாதில் வெடித்திருக்கும் கலவரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை தொடர்வதால், அந்நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

என்ன பிரச்சினை?

இராக்கில் 2021 அக்டோபர் 10-ல் தேர்தல் நடந்த நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இதுவரை யாரும் பிரதமராகப் பொறுப்பேற்க முடியவில்லை. ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசியல் கூட்டணியான ‘ஃபடா மற்றும் ஸ்டேட் ஆஃப் லா’ கூட்டணி, தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது எனக் கூறிவருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த இன்னொரு கட்சியான முக்தடா அல்-சாதரின் ‘சாதரிஸ்ட் மூவ்மென்ட்’ கட்சி தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறிவருகிறது. 329 இடங்களைக் கொண்ட இராக் நாடாளுமன்றத்தில், 73 இடங்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

அரசியல் குழப்பம்

ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசியல் கூட்டணியான ‘ஃபடா மற்றும் ஸ்டேட் ஆஃப் லா’ கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கட்டமைப்பு கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். முன்னாள் அமைச்சரும், ஆளுநராகப் பதவி வகித்தவருமான முகமது அல்-சூடானியைப் பிரதமராக்க ஈரான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஒருங்கிணைப்பு கட்டமைப்பு கூட்டணி முடிவுசெய்திருக்கிறது.

இதற்கிடையே, பெரும்பான்மை அரசை அமைப்பது குறித்து அல்-சாதர் வலியுறுத்திவந்தார். எனினும், அதில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாததால், தனது கட்சியைச் சேர்ந்த 73 எம்.பி-க்களும் ராஜினாமா செய்வார்கள் என ஜூன் மாதம் அறிவித்தார்.

அதிரடி அறிவிப்புகளுக்குச் சொந்தக்காரர்

அவ்வப்போது அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் வழக்க கொண்டவர் முக்தடா அல்-சாதர். அவரது அறிவிப்புகளால் தூண்டப்பட்டு அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களிலும், சில சமயங்களில் வன்முறையிலும் இறங்குவதுண்டு. முகமது அல்-சூடானி பிரதமராவார் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஜூலை 27-ல் அவரது தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் இராக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

இராக் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல், பல நாடுகளின் தூதரகங்களும் அமைந்திருக்கும் கிரீன் ஸோன் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரும் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்தச் சூழலில், அரசியலைவிட்டே விலகுவதாகவும், ‘சாதரிஸ்ட் மூவ்மென்ட்’ கட்சியின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும் நேற்று ட்விட்டரில் அவர் எழுதிய பதிவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு அவர்கள் முன்னேறினர். அத்துடன், ஒருங்கிணைப்பு கட்டமைப்பு கூட்டணி ஆதரவாளர்களுடன் மோதலையும் தொடங்கினர். இரு தரப்பும் கற்களை எறிந்து தாக்கிக்கொண்டன.

வெடித்த கலவரம்

ஒருகட்டத்தில் இது பெரும் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து, பிரதமர் முஸ்தபா அல்-காதேமி அமைச்சரவையின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவைப்பதாக அறிவித்தார். கிரீன் ஸோன் பகுதியில் உள்ள தூதரக அலுவலகங்களை மூடுவதாக நெதர்லாந்து போன்ற நாடுகள் அறிவித்தன. கலவரம் பரவுவதைத் தடுக்க ராணுவம் பதிலடித் தாக்குதல்களில் இறங்கியது.

நேற்று மாலை பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. நேரம் ஆக அக மோதல் மேலும் உக்கிரமடைந்தது. கிரீன் ஸோன் பகுதியில் ஏவுகணைகள் விழுந்ததில் கட்டிடங்கள் சேதமடைந்தன. இன்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இத்தனை களேபரங்கள் நடந்த பின்னர், கிரீன் ஸோன் பகுதியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட முக்தடா அல்-சாதர், “இது புரட்சி அல்ல. ஏனெனில், இது அமைதியான குணத்தை இழந்துவிட்டது” எனத் தனது ஆதரவாளர்களைக் கடிந்துகொண்டதுடன், வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.

உள்நாட்டுப் போராக வெடிக்குமா?

முக்தடா அல்-சாதரின் வேண்டுகோள்களைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் கிரீன் ஸோன் பகுதியிலிருந்து வெளியேறத் தொடங்கிவிட்டனர். எனினும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. பல்வேறு மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கெனவே, இந்தக் கலவரங்களால் அச்சமடைந்த பலர் அண்டை நாடான ஈரானுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இதையடுத்து எல்லையை மூடிவிட்டது ஈரான்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வழி செய்ய வேண்டும் என அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

முக்தடா அல்-சாதர்
முக்தடா அல்-சாதர்

இது முதல் முறை அல்ல

இப்படிப் பெரும் கலவரம் வெடிக்கும் வகையில், அரசியல் துறவற அறிவிப்பை வெளியிட்ட முக்தடா அல்-சாதர், இதற்கு முன்னரும் அரசியலிலிருந்து விலகப்போவதாக ஒருமுறை அறிவித்தவர். ஆனால், மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை அவர் தொடங்கினார். எனவே, இந்த முறையும் அவர் கவன ஈர்ப்புக்காக இப்படி அறிவித்திருக்கிறார் என்றும், மீண்டும் அரசியலுக்கு அவர் திரும்புவார் என்றும் இராக் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அரசியல் அசாதாரணமானதுதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in